இந்தியாவில் 3.5 டன் வரையிலான வாகனங்களுக்கு முதன்முதலாக விபத்து சோதனை மையம்: நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்


புதுடெல்லி: இந்தியாவில் முதன்முதலாக 3.5 டன் வரையிலான வாகனங்களுக்கு விபத்து சோதனைத் திட்டமான பாரத் என்சிஏபியை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார். இந்தியாவில் முதன்முதலாக பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (பாரத் என்சிஏபி) தொடங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் சொந்த விபத்து சோதனை திட்டமாகும். இது வெளிநாட்டில் நடத்தப்படும் சோதனைகளை விட மலிவானது. மேலும் விபத்து சோதனை திட்டத்தில் பங்கு பெறும் புதிய வாகனங்களுக்கு உரிய நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கவும் வகை செய்யப்படும். இதனால் புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு தயாரிப்பின் தரத்தைப் புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் வாகனங்கள் வாங்கும் முடிவை எடுக்க உதவும்.

இந்த திட்டமான பாரத் என்சிஏபி வரும் அக்டோபர் 1 முதல் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை தொடங்கி வைத்த ஒன்றிய அமைச்சர் கட்கரி பேசியதாவது: பாரத் என்சிஏபி என்பது இந்தியாவின் சொந்த கிராஷ் டெஸ்டிங் புரோகிராம். இது மிக முக்கியமான திட்டம். வெளிநாட்டில் புதிய வாகனங்களை விபத்து சோதனை திட்டத்தில் பரிசோதனை செய்ய ரூ. 2.5 கோடி வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பாரத் என்சிஏபி திட்டத்தின் கீழ் ரூ. 60 லட்சம் கட்டணம் தான் வசூலிக்கப்படும்.

எனவே உலகம் முழுவதும் உள்ள வாகனங்கள் இங்கு சோதனை நடத்தப்படும். வாகனங்களின் செயல்திறன் அடிப்படையில், 0 முதல் 5 என்ற அளவில் நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்படும். ஏழாவது இடத்தில் இருந்து, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஜப்பானை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா மாறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

*தினமும் 400 பேர் விபத்தில் பலி
இந்தியாவில் நடக்கும் சாலைவிபத்து குறித்து அமைச்சர் கட்கரி கூறுகையில்,’ இந்தியாவில் நாங்கள் முக்கியமான சவால்களை எதிர்கொள்கிறோம். ஒன்று சாலை விபத்துகள் மற்றொன்று காற்று மாசுபாடு. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 5 லட்சம் விபத்துக்கள் மற்றும் 1.5 லட்சம் இறப்புகள் பதிவாகிறது. ஒவ்வொரு நாளும் 1,100 விபத்துக்கள் மற்றும் 400 இறப்புகள் பதிவாகிறது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 47 விபத்துக்கள் மற்றும் 18 இறப்புகள் நடக்கிறது. 70 சதவீத இறப்புகளில் 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் பலியாகிறார்கள். இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இழப்பு 3.14 சதவீதமாக உள்ளது’ என்றார்.

The post இந்தியாவில் 3.5 டன் வரையிலான வாகனங்களுக்கு முதன்முதலாக விபத்து சோதனை மையம்: நிதின் கட்கரி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: