தேசிய ஆணையம் செயல்படும் வரையில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பார்வை குழுவே கவனிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம்

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஒன்றிய அரசு ஒரு புதிய பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: ஜல் சக்தி அமைச்சகம் கடந்த 25.04.2022ல் ஒன்றிய நீர் ஆணையத்தின் தலைவர் தலைமையில் , கூடுதல் பொறுப்பு அடிப்படையில் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தை நிறுவியது.

தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திற்கு ஆதரவாக, ஒன்றிய நீர் ஆணையத்தின் இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள் தலைமையில் நான்கு பிராந்திய அலுவலகங்கள் (வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு) நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட 65 அணைகள், அணைப் பாதுகாப்புச் சட்டம் 2021ன் கீழ், தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் (என்டிஎஸ்ஏ) அதிகார வரம்பிற்கு உட்பட்டுள்ளது.எனினும் இந்த ஆணையம் இன்னும் முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரவில்லை.

அதன் காரணமாக தற்போது இருக்கும் முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவே , முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும் வரையில், முல்லைப் பெரியாறு அணையின் தற்போதைய மேற்பார்வைக் குழுவே அணையின் பாதுகாப்பு அம்சங்களைத் தொடர்ந்து கவனிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேசிய ஆணையம் செயல்படும் வரையில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பார்வை குழுவே கவனிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் appeared first on Dinakaran.

Related Stories: