ஐதராபாத்: ‘தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு அலுவலகங்களில் மீண்டும் இடைத்தரகர்கள் சகாப்தம் தொடங்கும்’ என அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் கூறி உள்ளார். தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சூர்யபேட்டையில் ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று திறந்து வைத்து அம்மாநில முதல்வரும், பிஆர்எஸ் கட்சி தலைவருமான சந்திரசேகரராவ் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: ஒருங்கிணைந்த நிலப்பதிவேடு வசதியை வழங்கும் தரணி இணையதளத்தை ரத்து செய்வோம் என காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது. இந்த நடவடிக்கை மீண்டும் அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்களை நுழையச் செய்து விடும்.
எனவே தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், வருவாய் அலுவலகம், பதிவு அலுவலகங்களில் இடைத்தரகர்களின் சகாப்தம் தொடங்கிவிடும். இப்போது உள்ள தரணி இணையதளத்தில் உள்ள நிலப்பதிவேடுகளை யாராலும் சீர்குலைக்க முடியாது. முதல்வர், தலைமை செயலாளர் நினைத்தால் கூட முடியாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சமூக ஓய்வூதியமாக மாதம் ரூ.4000 வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். இதை ஏன் அக்கட்சி ஆளும் மற்ற மாநிலங்களில் செய்யவில்லை? கடந்த 50 ஆண்டில் பாஜவுக்கும், காங்கிரசுக்கும் மக்கள் பலமுறை வாய்ப்பளித்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இவ்வாறு சந்திரசேகரராவ் பேசினார்.
The post காங். ஆட்சிக்கு வந்தால் இடைத்தரகர் காலம் மீண்டும் தொடங்கும்: சந்திரசேகரராவ் பிரசாரம் appeared first on Dinakaran.
