செப்டம்பர் 1 முதல் அமல் நிறுவனங்கள் தரும் வீட்டில் வசிப்போருக்கு வரி சலுகை: வருமான வரித்துறை அறிவிப்பு

புதுடெல்லி: நிறுவனங்களுக்கு சொந்தமான வீடுகளில் வாடகை இன்றி வசிக்கும் ஊழியர்களுக்கு புதிய வரிச்சலுகையை வருமான வரித்துறை அறிவித்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளைத் தவிர்த்து, சில தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளில் ஊழியர்கள் தங்க அனுமதிக்கின்றன. அப்படிப்பட்ட வீடுகளுக்கு வாடகை இல்லாமலோ, மிக குறைவான வாடகையையோ நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளும். இது ஊழியர்கள் பெறும் ஆதாயமாக கணக்கிடப்பட்டு, வருமான வரி விதிக்கப்படும்.

இதுவரை, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25 லட்சத்திற்கு மேல் வசிக்கும் மக்கள் தொகை கொண்ட நகரங்களில், வாடகை இல்லாத தங்குமிடங்களுக்காக சம்பளத்தில் 15 சதவீதமும், 10 லட்சம் முதல் 25 லட்சத்திற்கு உட்பட்ட நகரங்களில் 10 சதவீதமும் வருமான வரி செலுத்த வேண்டும். இந்நிலையில், தற்போது இது 40 லட்சத்திற்கு மேல் வசிக்கும் மக்கள் தொகை கொண்ட நகரங்களில், வாடகை இல்லாத தங்குமிடங்களுக்காக சம்பளத்தில் 10 சதவீதமும், 15 லட்சம் முதல் 40 லட்சத்திற்கு உட்பட்ட நகரங்களில் 7.5 சதவீதமும் என வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி திருத்தம் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

* வீட்டு கடன் இஎம்ஐ அதிகரிக்க வாய்ப்பு
கடன் வட்டி அதிகரித்து வருவதால் கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் நிலையான வட்டி விகித்துக்கு மாற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், இ.எம்.ஐ உயர்த்துவது குறித்து முன்னமே வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சிலவகை கடன்களுக்கு மாத தவணை தொகையை (இ.எம்.ஐ.) உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. புதிய விதிமுறைகளின் படி வாடிக்கையாளர்கள் மாறுபட்ட வட்டியில் இருந்து நிலையான வட்டி விகிதத்துக்கு மாறும் போது வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும். பொதுவாக மாறுபடும் வட்டி விகிதத்தை விட நிலையான வட்டி விகிதம் அரை சதவீதம் அதிகமாக இருக்கும். இதன் மூலம் நிலையான வட்டிக்கு மாறும் போது வீட்டு கடன் உள்ளிட்ட கடன்களுக்கு மாதாந்திர தவணை தொகை (இ.எம்.ஐ.) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

The post செப்டம்பர் 1 முதல் அமல் நிறுவனங்கள் தரும் வீட்டில் வசிப்போருக்கு வரி சலுகை: வருமான வரித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: