எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில் கே.எஸ்.அழகிரி மாற்றப்படுவாரா அல்லது நீடிப்பாரா என்பதை கட்சி தலைமை முறைப்படி அறிவித்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை வேகப்படுத்த முடியும். எனவே இந்த பிரச்னைக்கு டெல்லி தலைமை ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் பெங்களூரு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து பேசினர். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து கே.எஸ்.அழகிரி, கார்கேவுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் எடுக்கப்பட வேண்டிய அதிரடி நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் தலைவர் மாற்றம் என்று தொடர்ந்து வெளியாகும் தகவல்கள் தேர்தல் பணிகளை தடுப்பதாக கார்கேவிடம் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டை சேர்ந்த 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஜெயக்குமார் எம்பி மற்றும் 30 மாவட்ட தலைவர்கள் சென்றிருந்ததது குறிப்பிடத்தக்கது. அவர்களின் கோரிக்கையை ஒரு மனுவாகவும் எழுதி கார்கேவிடம் கொடுத்தனர்.
அதை படித்து பார்த்த கார்கே நீண்ட நேரம் அவர்களுடன் உரையாடியுள்ளார். மேலும் தேர்தல் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படக்கூடாது. கட்சி பணிகளில் அனைவரும் தீவிரம் காட்ட வேண்டும் என்று அவர்களை அறிவுறுத்தியுள்ளார். அவர்களிடம், ‘தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து கட்சி தலைமை எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. புதிய தலைவர் குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்தி தான். எனவே தொடர்ந்து கட்சி பணிகளில் தீவிரம் காட்டுங்கள்’ என்று கார்கே உறுதி அளித்ததாக கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனால் கே.எஸ்.அழகிரியுடன் சென்றவர்கள் உற்சாகமாக சென்னை திரும்பியுள்ளனர். அதே நேரம் டெல்லி தலைமையிடம் மூத்த தலைவர்கள் சிலர் டெல்லியில் முகாமிட்டு தலைவர் மாற்றம் குறித்து காய் நகர்த்தி வருவதும் காங்கிரஸ் வட்டாரத்தில் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் மாற்றம் இருக்கும்பட்சத்தில், தற்போதைய சூழ்நிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதன், எம்பிக்கள் டாக்டர் செல்லக்குமார், மாணிக்கம் தாகூர் ஆகியோரிடையே தொடர்ந்து போட்டி நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
The post தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை என எம்எல்ஏக்கள், நிர்வாகிகளிடம் கார்கே உறுதி: எதுவாக இருந்தாலும் முறைப்படி அறிவிக்க காங்கிரசார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
