தபோல்கர், பன்சாரே, கவுரி லங்கேஷ், கல்புர்கி செயற்பாட்டாளர்களின் படுகொலைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என உச்சநீதிமன்றம் கேள்வி.!!

டெல்லி: தபோல்கர், பன்சாரே, கவுரி லங்கேஷ், கல்புர்கி படுகொலைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 4 படுகொலைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என தபோல்கரின் மகள் முக்தா தபோல்கர் தரப்பு வாதம் செய்துள்ளனர். 4 செயற்பாட்டாளர்களின் படுகொலைகளின் தொடர்பு குறித்து பதிலளிக்க சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. 2013, 2014 -ம் ஆண்டுகளில 4 செயற்பாட்டாளர்களும் இந்துத்துவ தீவிரவாத அமைப்பினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

வழக்கை மும்பை ஐகோர்ட் கண்காணிக்க மறுத்த நிலையில் தபோல்கரின் மகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கொலையாளிகள் கைது செய்யப்படாத நிலையில் மும்பை ஐகோர்ட் விசாரணையை கண்காணிக்க மறுத்து விட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். 24 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியும் போதிய ஆதாரங்கள் இல்லை என சிபிஐ தரப்பு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. படுகொலைகள் தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு 2 வாரம் உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகாவில் சமூக செயற்பாட்டாளர்களான தபோல்கர், பன்சாரே, கவுரி லங்கேஷ், கல்புர்கி ஆகியோர் இந்துத்துவ தீவிரவாத அமைப்பினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கு விசாரணையை மும்பை உயர்நீதிமன்றம் கண்காணித்து வந்தது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கு விசாரணையை கண்காணிக்க முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தபோல்கரின் மகள் முக்தா வழக்கு தொடர்ந்தார்.

முக்தா தபோல்கரின் இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்கே கவுல், சுதன்சு தூலியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது முக்தா தபோல்கர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஆஜரானார். அவர் தமது வாதத்தின் போது, தபோல்கர், பன்சாரே, கவுரி லங்கேஷ், கல்புர்கி படுகொலை சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இவ்வழக்குகளில் தலைமறைவான கொலையாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை கண்காணிக்க மறுத்திருப்பது சரியானது அல்ல எனவும் சுட்டிக்காட்டினார்.

இவ்வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி, ஏற்கனவே இவ்வழக்கில் 20 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். தபோல்கர் கொலை வழக்கில் 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் 3 பேருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை. 2 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என தெரியவந்தது. இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது என்றார். மேலும் இந்த கொலை வழக்குகளில் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள முடிச்சுகள் ஏதேனும் இருக்கிறதா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தபோல்கர் மகள் தரப்புக்கு 2 வார அவகாசம் வழங்கியும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 4 செயற்பாட்டாளர்களின் படுகொலைகளின் தொடர்பு குறித்து பதிலளிக்க சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது

 

The post தபோல்கர், பன்சாரே, கவுரி லங்கேஷ், கல்புர்கி செயற்பாட்டாளர்களின் படுகொலைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என உச்சநீதிமன்றம் கேள்வி.!! appeared first on Dinakaran.

Related Stories: