சிறுமிக்கு பாலியல் தொல்லை முயற்சி பெயிண்டருக்கு இரண்டரை ஆண்டு கடுங்காவல் சிறை போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரி, ஆக. 19: திருக்கனூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த பெயிண்டருக்கு போக்சோ விரைவு நீதிமன்றம் ரூ.5 ஆயிரம் அபராதத்துடன் இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. புதுச்சேரி திருக்கனூரில் கடந்த 2020ல் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக 38 வயதான கார்த்திக் (எ) பெரமன் என்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார். அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக திருக்கனூர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவானது. இவ்வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் குற்றங்களை விசாரிக்கும் விரைவு நீதிமன்றம் தொடங்கிய பிறகு அங்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சோபனா தேவி நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக்கு போக்சோ சட்டப்பிரிவுப்படி இரண்டரை ஆண்டுகள் கடுங்காவலும், ஐபிசி 354 பிரிவின் கீழ் இரண்டரை ஆண்டுகள் கடுங்காவலும், ஐபிசி 342 பிரிவின் கீழ் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். சிறப்பு அரசு வழக்கறிஞராக பச்சயப்பன் ஆஜரானார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம் வழங்க அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். புதுவையில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக, விரைவு போக்சோ நீதிமன்றம் துவங்கப்பட்ட பிறகு அளிக்கப்பட்ட முதல் தீர்ப்பு இதுவாகும்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை முயற்சி பெயிண்டருக்கு இரண்டரை ஆண்டு கடுங்காவல் சிறை போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: