பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளை மட்டும் விடுவித்தது எப்படி?… மற்ற கைதிகளுக்கு சட்டம் ஏன் பொருந்தவில்லை?: குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரும் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை வன்முறை கும்பல் பாலியல் வல்லுறவு செய்தது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரையும் கொள்கை முடிவின் அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்தது. குற்றவாளிகளை ஒட்டுமொத்தமாக விடுதலை செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் பூயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் வாதிட்ட பில்கிஸ் பானு வழக்கறிஞர் சோபா குப்தா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரையும் ஒட்டுமொத்தமாக விடுவித்தது சட்டவிரோதம் என்று குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் அரிதினும் அரிதான குற்றத்தை குற்றவாளிகள் செய்யவில்லை என்றும் ஒன்றிய அரசும், குஜராத் அரசும் வாதிட்டான. இதை கேட்ட நீதிபதிகள் கொள்கை அடைப்படையில் பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரை மட்டும் விடுவித்தது எப்படி? என குஜராத் அரசுக்கு கேள்வி எழுப்பினர். மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களை 14 ஆண்டுகளில் விடுவித்த போது அதே அடிப்படையில் மற்ற கைதிகளை விடுவிக்காதது ஏன்? என்றும் நீதிபதிகள் வினவினர்.

கொலை, பாலியல் வன்முறை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபட்ட இவர்களை விடுவிக்கும் போது மற்ற கைதிகளுக்கு இந்த சட்டம் என பொருந்தவில்லை என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள் கைதிகளின் தண்டனை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக இந்த வழக்கிற்கு தொடர்பே இல்லாத கோத்ரா நீதிமன்றத்தின் கருத்து கேட்டது ஏன்? என வினவிய நீதிபதிகள் குற்றவாளிகளை விடுவிக்க சிறை ஆலோசனைக் குழு எவ்வாறு அமைக்கப்பட்டது என்ற விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

The post பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளை மட்டும் விடுவித்தது எப்படி?… மற்ற கைதிகளுக்கு சட்டம் ஏன் பொருந்தவில்லை?: குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: