புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் புதுவைக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில் மகாகவி பாரதியார் நினைவு இல்லம் அமைந்துள்ளது. பாரதியார் புகழைப் போற்றுகின்ற வகையில் 10 ஆண்டுகள் அவர் வசித்து வந்த புதுச்சேரி வீட்டை அரசுடையமையாக்கி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இந்த பாரதியாரின் நினைவு இல்லம். 1882ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்த சுப்பிரமணியன் சிறு வயது முதலே தமிழ் மீது மிகுந்த பற்றுடையவராக இருந்தார். இதனால் தனது ஏழு வயதில் கவிதை எழுதத் தொடங்கினார். இதற்கிடையில் எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் இவருக்கு பாரதி என்ற பட்டத்தைச் சூட்டினர். 1897ம் ஆண்டு செல்லம்மா என்பவரை பாரதியார் திருமணம் செய்துகொண்டார். பாரதியார் எட்டயபுரம் அரண்மனையில் பணியாற்றினார். அதனை தொடர்ந்து பத்திரிகை ஆசிரியராகவும், மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றினார். அந்த சமயத்தில் சுதந்திர போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தான் பணியாற்றும் பத்திரிகைகளில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கருத்தை வெளியிட்டு வந்தார். இதனால் அவரைக் கைது செய்ய ஆங்கிலேயே அரசு முடிவு செய்தது. இதில் இருந்து தப்பிக்க நண்பர்களின் ஆலோசனைப்படி பாரதியார் பிரான்சின் வசமிருந்த புதுச்சேரிக்கு வந்து 1908ல் இருந்து 1910 வரை இந்த வீட்டில் வசித்தார். இங்கிருந்துதான் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்ட பல படைப்புகளை அவர் தந்தார். நினைவு இல்லமாக இந்த வீட்டை புதுச்சேரி அரசு மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகம் ஆய்வுமையம் என்ற பெயரில் பராமரித்துவருகிறது.
மிகப் பழமையான இந்த இல்லம் பராமரிப்புப் பணிகளுக்காக 2009ல் தற்காலிகமாக மூடப்பட்டது. புனரமைப்புப் பணிகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக முற்றுப் பெறாமல் இருந்த நிலையில் 2016ல் பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த வீடு சுண்ணாம்புக் காரைக் கொண்டும், மெட்ராஸ் டைல்ஸ் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைக் கொண்டும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இல்லத்தின் முகப்புத் தோற்றம் பிரெஞ்சு கட்டிடக் கலையைப் பிரதிபலிப்பது போல் இருந்தாலும் உள்புறத்தில் தமிழர் மரபுப்படி நடை, முற்றம், அறைகள், முதல் தளம் ஆகியவை உள்ளன.இங்கே, ஆயிரக்கணக்கில் பாரதியின் கையெழுத்துப்பிரதிப் படைப்புகளும், அவர் பயன்படுத்திய பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களும் அரிய பொருட்களாக பாதுகாக்கப்படுகின்றன. பாரதியாரின் அபூர்வமான ஒளிப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இங்கு ஒரு சிறப்பு நூலகமும் உள்ளது. இங்கு பாரதியின் கையெழுத்துப் பிரதி படைப்புகள் உள்பட சுமார் 3,000 நூல்கள் இல்லத்தின் தரைத்தளத்தில் உள்ளன. மேல்தளத்தில் 17,000 புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் இடம்பெற்று பராமரிக்கப்படுகின்றன.
The post புதுவை பாரதியார் நினைவு இல்லம் appeared first on Dinakaran.