டெல்லி: முன்னாள் பிரதமர் நேருவின் பாரம்பரியத்தை மறுப்பது, சிதைப்பது மற்றும் அவதூறு பரப்புவதே பிரதமர் மோடியின் ஒற்றை குறிக்கோளாக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் உள்ள இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்லால் நேருவின் பெயரிடப்பட்ட நேரு அருங்காட்சியகம் பிரதமர் அருங்காட்சியகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டிவீட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் நேருவின் பாரம்பரியத்தை மறுப்பது, சிதைப்பது, மற்றும் அவதூறு பரப்புவதே பிரதமர் மோடியின் ஒற்றை குறிக்கோளாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அச்சம் மற்றும் குழப்பம் அடைந்துள்ள பிரதமர் மோடி இந்தியாவின் நீண்டகால பிரதமர் நேருவின் பெயரை மாற்றியிருப்பதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் நேரு பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் என்று கூறியுள்ள அவர் சுதந்திர போராட்டத்தில் நேருவின் மகத்தான பங்களிப்பை யாரும் அழிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். நேருவின் பெயரை மாற்றியது விரக்தியின் வெளிப்பாடு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித் விமர்சித்துள்ளார். அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றலாம் தவிர வரலாற்றில் இடம் பெட்ரா நேருவின் பெயரை மாற்றமுடியாது என்று உத்தவ் சிவசேனா எம்.பி சஞ்சீவ் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியில் தொடங்கி சந்திரபோஸ் வரையிலான தலைவர்கள் படைத்த வரலாற்றை பாஜகவால் உருவாக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே அனைத்து பிரதமர்களுக்கும் உரிய மரியாதையை கொடுக்கும் வகையில் அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அருங்காட்சியகத்தில் அனைத்து பிரதமர்கள் வரலாறு இடம்பெற்றுள்ளதாகவும் பாஜக எம்.பி ரவி ஷங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.
The post மோடியின் அச்சத்தால் நேருவின் பெயர் மாற்றம்: டெல்லியில் பிரதமர் நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளதால் காங்கிரஸ் எதிர்ப்பு appeared first on Dinakaran.
