ஆன்லைன் தேர்வில் 90% மதிப்பெண், நேரடி தேர்வில் 1700 மாணவர்கள் பூஜ்யம்.. பருவத் தேர்வில் காதல் கதை.. சத்தீஸ்கரில் ஆசிரியர்கள் அதிர்ச்சி!!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் ஆன்லைன் தேர்வுகளில் 90%க்கும் மேல் மதிப்பெண் எடுத்த வெற்றி பெற்ற 1700 கல்லூரி மாணவர்கள் வகுப்பறையில் நேரடியாக எழுதிய செமஸ்டர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண்கள் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் புகழ்பெற்ற பண்டிட் ரவி சங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தில் பருவத்தேர்வுகள் அண்மையில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் 150 உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த 1.5 லட்சம் மாணவர்கள் பருவத் தேர்வுகளை எழுதினர். இவர்களில் 1700 மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில் பூஜ்யம் மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளனர். இந்த 1,700 மாணவர்களும் கொரோனா காலத்தில் நடந்த ஆன்லைன் தேர்வில் 90%த்திற்கும் அதிகமான மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், கல்லூரி வகுப்பறையில் முதன்முறையாக எழுதிய நேரடி தேர்வில் குறிப்பிட்ட பாடங்களில் ஒரு மதிப்பெண் கூட பெற முடியாதது தெரியவந்துள்ளது.

சுமார் 60 ஆண்டுகளாக இயங்கி வரும் ரவி சங்கர் சுக்லா பல்கலைகழகத்தின் வரலாற்றில் மிக மோசமான தேர்வு முடிவுகளாக இது அமைந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் கல்வியின் தரம் எவ்வளவு மோசமானதாக இருந்தது என்பதற்கு 1,700 மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்ணே உதாரணம் என கல்வியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.மாணவர்கள் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தது ஒருபுறம் இருக்க, அவர்களில் பெரும்பாலான மாணவர்கள் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சொந்த கற்பனையில் எழுதி உள்ள பதில்களும் அதிர்ச்சி தருவதாக உள்ளனர்.

1869ம் ஆண்டு காந்தி பிறந்த நிலையில், அதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்னதாக 1857ல் நடந்த சிப்பாய் கலகப் போராட்டத்தில் காந்தி பங்கேற்றதாக மாணவர் ஒருவர் எழுதியுள்ளார்.மற்றொரு மாணவர் தனது காதலி பிரிந்து விட்டதால் தனக்கு தேர்வு எழுத விருப்பமில்லை என விடைத்தாளில் எழுதிவிட்டு தனது காதல் கதை முழுவதையும் உருக்கத்துடன் எழுதி வைத்துள்ளார்.தாவரவியல் பாட கேள்வி தாளில் தேயிலையின் அறிவியல் பெயர் என்ன என்று கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு விடை அளித்துள்ள மாணவர் ஒருவர் 3 வகையான தேயிலை இருப்பதாகவும் அவை பால் டீ, க்ரீன் டீ மற்றும் பிளாக் டீ என தனக்குத் தெரிந்ததை எழுதியுள்ளார். இவர்களாவது பரவாயில்லை என்று கூறும் வகையில், பிகாம் மாணவர் ஒருவர் தனக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண்களை வழங்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளார். மாணவர்களின் இந்த செயல்பாடுகள் நகைச்சுவையாக தெரிந்தாலும் இது அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என கல்வியாளர்கள் கவலை தெரிவிக்க்கின்றனர்.

The post ஆன்லைன் தேர்வில் 90% மதிப்பெண், நேரடி தேர்வில் 1700 மாணவர்கள் பூஜ்யம்.. பருவத் தேர்வில் காதல் கதை.. சத்தீஸ்கரில் ஆசிரியர்கள் அதிர்ச்சி!! appeared first on Dinakaran.

Related Stories: