கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாயூரநாதர் கோயிலில் திருப்பணி மும்முரம்

 

மயிலாடுதுறை,ஆக.12: மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி வேலைகளை, திருவாவடுதுறை ஆதீனம் ஆய்வு செய்தார். மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு வரும் செப்.3ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதனையொட்டி பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணிகள், கோயில் வர்ணம் தீட்டும் பணிகள், திருக்குளம் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

திருப்பணி வேலைகளை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிப்பதற்கும், சிறந்த முறையில் வேலைகள் நடைபெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக விநாயகர், அம்பாள் உட்பட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
பின்னர் 24வது குருமகா சன்னிதானம் நிருபர்களிடம் கூறுகையில், பழமைவாய்ந்த மாயூரநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் செப்.3ம் தேதி நடக்கிறது. பக்தர்கள், உபயதாரர்கள் உதவியுடன் கோயில் முழுவதும் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு வருகிறது.

பார்வதி தேவி மயில் உருகொண்டு சிவனை பூஜிட்டு சாபவிமோச்சனம் பெற்றதால் பிரசித்திபெற்ற இக்கோயில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் அருளை பெற வேண்டும் என்றார். உடன் சிவபுரம்வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார், தொழிலதிபர்கள் விஜயகுமார், சேகர், பிராமணர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடரமணன், நலலாசிரியர் மனோகரன், கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் உட்பட பலர் இருந்தனர்.

The post கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாயூரநாதர் கோயிலில் திருப்பணி மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: