இரணியல் கால்வாய் தொட்டி பாலத்தை சீரமைக்க வேண்டும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

திங்கள்சந்தை, ஆக. 12 : இரணியல் கால்வாய் தொட்டிப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தக்கலை தெற்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி பாகநிலை முகவர்கள் (பிஎல்ஏ-2) கூட்டம் இரணியலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்ராஜ், பேரூர் செயலாளர் எட்வின், சுப்பிரமணியம், சுரேஷ், காட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத் தலைவர் ஹெர்பர்ட் வரவேற்றார்.குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாக்குச்சாவடி பாகநிலை முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

கூட்டத்தில் மணிப்பூரில் நடந்து வரும் கொலை, கொள்ளை, வன்புணர்வு, கலவரம், தீவைப்பு சம்பவங்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்காத ஆளும் ஒன்றிய, மாநில பாஜ அரசுகளை கண்டிப்பதோடு, மணிப்பூர் மாநில பாஜ அரசை கலைத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த கேட்டுக்கொள்வது. வருகிற 17ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தென் மண்டல திமுக வாக்குச்சாவடி பாகநிலை முகவர்கள் (பிஎல்ஏ 2) பயிற்சி முகாமில் தக்கலை தெற்கு ஒன்றிய 90 வாக்குச்சாவடி முகவர்களும் கலந்து கொள்வது.

பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உழைப்பது. தண்டவாள விரிவாக்க பணிக்காக உடைத்து கட்டப்பட்ட இரணியல் கால்வாய் தொட்டிப்பாலம் தாழ்வாக இருப்பதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டுவது. ஆமை வேகத்தில் நடந்து வரும் தண்டவாளம் விரிவாக்க பணி மற்றும் நெய்யூர் – பரம்பை மேம்பால பணிகளை ரயில்வே நிர்வாகம் விரைந்து முடிக்க கேட்டுக்கொள்வது. நான்கு வழிச்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் ஜெஸ்டஸ்ரோக், மார்சல், டேவிட் லிவிங்ஸ்டன் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள், அணிகளின் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், வாக்குச்சாவடி பாகநிலை முகவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோ சேம் நன்றி கூறினார்.

The post இரணியல் கால்வாய் தொட்டி பாலத்தை சீரமைக்க வேண்டும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: