மணிப்பூர் விவகாரத்தில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்கள்: ராகுலுக்கு பதிலளித்து அமித்ஷா பேச்சு

புதுடெல்லி: ‘மணிப்பூர் விவகாரத்தில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றக் கூடாது’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் பேசியதைத் தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது: இந்த நம்பிக்கையில்லா தீர்மானம், மக்களுக்கோ, இந்த அவைக்கோ அரசின் மீது நம்பிக்கை இல்லாததால் கொண்டு வரப்பட்டதல்ல. பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 9 ஆண்டுகளில் 50 வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுத்துள்ளது. இதனால் நாட்டு மக்களும், நாடாளுமன்றமும் ஒன்றிய பாஜ அரசு மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த நாட்டிலிருந்து ஊழல், வாரிசு அரசியல், திருப்திபடுத்தும் அரசியலை வெளியேற்ற வேண்டும், செயல்திறன் அரசியலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என பிரதமர் மோடி உறுதி எடுத்துள்ளார். இங்குள்ள சில தலைவர்களோ 13 முறை அரசியல் பிரவேசம் எடுத்து, 13 முறையும் தோற்றுள்ளனர்.
ஆட்சியை காப்பாற்றுவதற்காக ஊழலில் ஈடுபடுவதே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் குணமாக இருந்தது. முந்தைய ஆட்சியில் நடந்த ரூ.12 லட்சம் கோடியை மறைக்கத்தான் ‘இந்தியா’ என கூட்டணியை பெயரை மாற்றி உள்ளனர். காஷ்மீரிலிருந்து முழுமையாக தீவிரவாதத்தை விரட்ட வேண்டுமென பாஜ அரசு தொடர்நது உழைத்து வருகிறது. இப்போது காஷ்மீரில் ஒரு கல்வீச்சு சம்பவம் கூட நடப்பதில்லை. தீவிரவாதிகள் இறந்தால், சவ ஊர்வலங்கள் எதுவும் நடப்பதில்லை.

மணிப்பூரில் நடந்த சம்பவங்கள் நிச்சயம் ஒரு சமூகமாக நமக்கு அவமானகரமானது. ஆனால் அந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது இன்னும் கேவலமானது. காங்கிரஸ் ஆட்சியில் தான் நாட்டில் அதிகமான மதக் கலவரங்கள் நடந்துள்ளன. 1993ல் நாகா-குக்கி மக்கள் இடையேயான மோதலில் 700 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் அதைப் பற்றி அப்போது நாடாளுமன்றத்தில் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ யாரும் பதிலளிக்கவில்லை. தற்போது மணிப்பூர் விவகாரத்தில் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் இருந்தே நான் பதிலளிக்க தயாராக இருந்தேன். ஆனால் எதிர்க்கட்சிகள்தான் என்னை பேச விடாமல் தடுத்தன. இது என்ன மாதிரியான ஜனநாயகம்? மணிப்பூரில் கடந்த மே மாதம் 107 மக்கள் கொல்லப்பட்டனர். ஜூனில் 30 பேர் கொல்லப்பட்டனர். ஜூலையில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மே மாதத்தில் 107 பேர் கொல்லப்பட்டதில் 68 பேர் மே 3, 4, 5ம் தேதிகளில் நடந்த வன்முறையில் பலியானவர்கள். இதிலிருந்து என்ன சொல்ல வருகிறேன் என்றால், மணிப்பூரில் படிப்படியாக
வன்முறை குறைந்து வருகிறது. எனவே எரியும் தீயில் நாம் எண்ணெயை ஊற்றக் கூடாது. வன்முறையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பேச்சுவார்த்தையால் மட்டுமே எதற்கும் தீர்வு காண முடியும் என மெய்டீஸ், குக்கி மக்களை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இந்த ஒட்டுமொத்த அவையின் சார்பாக மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், மக்களவை இன்று காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

* எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மாநிலங்களவையில் நேற்றும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளி செய்தன. இதற்கு அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி மறுத்ததால் பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாலையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அதைத் தொடர்ந்து டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மணிப்பூர் விவகாரத்தில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்கள்: ராகுலுக்கு பதிலளித்து அமித்ஷா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: