மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

சென்னை: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு இட ஒதுக்கீட்டில் (எம்பிசி) வன்னியர்களுக்கு,   10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து, உயர்   நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது.கல்வி மற்றும்  வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட   வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் இருந்து 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி,   கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம்   நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சுவாமிநாதன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு   தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும்   கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, மனுதாரர்கள்   தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.எம்.விஜயன், சாதிவாரி கணக்கெடுப்பை   முடிக்காமல், எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது. என்றும் வாதிடப்பட்டது. மற்றொரு  மனுதாரரான மறவர் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல் எம்.மகாராஜா  வாதிடும்போது, சீர்மரபினர் பிரிவு மக்கள் தொகை எவ்வளவு என்று மத்திய அரசு  கோரிய நிலையில், அந்த புள்ளிவிபரங்களை சேகரிக்காமல் தமிழக அரசு அவசர அவசரமாக  இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது என்றார். தமிழக  அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி,  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983ல்   நடத்திய கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 13.01   சதவீதம் பேர் வன்னியர்கள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த   புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.   இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக   பா.ம.க. தலைவர் ராமதாஸ் தரப்பில் வக்கீல்கள் கே.பாலு, ஜோதிமணியன் ஆகியோர்   ஆஜராகிவாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர்.   தீர்ப்பில் கூறியிருப்பதாவது:  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 116 சாதிகள் உள்ள நிலையில் இந்த பிரிவினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியர் பிரிவுக்கு மட்டும் 20 சதவீதமும் இதர 115 பிரிவினருக்கு மீதமுள்ள 9.5 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இந்த சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது என்று மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு 9வது அட்டவணையில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசியலமைப்பு சரத்தில் திருத்தம் செய்தபிறகு ஜனாதிபதியின் ஒப்புதலுடன்தான் சட்ட திருத்தம் செய்ய முடியும்.தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தின் அறிக்கையே இல்லாமல், ஆணையத்தின் தலைவரின் கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.  அரசியலமைப்பு சரத்து 338க்கு எதிராகவும், அரசியலைமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமை சரத்துகளுக்கான 15, 16, 17க்கு முரணாக இந்த சட்டம் கொண்டுவந்துள்ளது.அருந்ததியர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முன்பு மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு உரிய ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டது. ஆனால், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற பிரிவினர் வன்னியர்களை காட்டிலும் முன்னேறி உள்ளதாக எந்த அளவீடும் தரப்படவில்லை. இது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்ருக்கு இடையே பாகுபாட்டை ஏற்படுத்திவிடும். மாநில அரசு சார்பில் போதுமான அளவீடு புள்ளி விபரங்கள் இல்லை. எந்த சாதிவாரி கணக்கெடுப்பும்  நடத்தாமல், அரசியலமைப்பு 9வது அட்டவணைக்கு எதிராக இந்த உள் ஒதுக்கீடு  வழங்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி, வேலைவாய்ப்புகளில் மிகவும்   பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு   வழங்கியது சட்ட விரோதம். எனவே, இந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த  தீர்ப்பு குறித்து அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் கூறும்போது, இந்த  உள் ஒதுக்கீட்டுக்கான சரியான அடிப்படை ஆதாரங்கள் இருப்பதால் உச்ச  நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளோம்.  பள்ளி மற்றும் கல்லூரிகளில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்  சேர்க்கை வழங்கப்பட்டுள்ளதை முக்கிய கருத்தாக உச்ச நீதிமன்றத்தில்  வைக்கவுள்ளோம் என்றார்.உச்ச நீதிமன்றத்தில் அரசு மற்றும் பாமக  உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு  செய்யவுள்ளதால் மனுதாரர்  தரப்பு வக்கீல்கள் கேவியட்  மனுவை தாக்கல் செய்ய முடிவுசெய்துள்ளனர்.1970 சதானந்தம் கமிட்டி என்ன சொல்கிறதுதீர்ப்பில் நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில்  செங்கல்பட்டு, தென் ஆற்காடு, வட ஆற்காடு சேலம், தர்மபுரி, திருச்சி,  தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே வன்னியர் சமூகத்தினர் அதிகம் உள்ளதாக  1970ல் சதானந்தம் கமிஷன் அறிக்கை தந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் மிக  குறைந்த அளவே வன்னியர் பிரிவினர் இருப்பதால் அந்த மாவட்டங்களில் உள்ள  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்கள் கல்வி, வேலைவாய்ப்பில்  பெரும் சிரமத்தை எதிர்கொள்வார்கள். அந்த மாவட்டங்களில் வன்னியர்கள் போட்டி  இல்லாமல் வேலை வாய்ப்புகளை பெற இந்த சட்டம் வழி ஏற்படுத்திவிடும் என்று கூறினர்.முக்கியமான 7 கேள்விகள்நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் மேலும் கூறியதாவது, மிகவும் பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கு, ஏற்கனவே உள்ள ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு   வழங்க மாநில  சட்டப்பேரவை முடிவு எடுக்க முடியுமா. சாதி வாரியாக எந்த   கணக்கெடுப்பும்  எடுக்காமல், இதுபோன்ற உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு   அதிகாரம்  உள்ளதா. எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான    பிரிவில் ஒரு பிரிவினருக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்க முடியுமா.  அரசியலமைப்பு 9வது அட்டவணைக்கு முரணாக, மாநில அரசு முடிவெடுக்க முடியுமா  என்பது   உள்ளிட்ட 7 கேள்விகளை இந்த நீதிமன்றம் எழுப்பியிருந்தது. அதற்கு   அரசு தரப்பிலும், எதிர் மனுதாரர்கள் தரப்பிலும் பதிலளித்து  வாதிடப்பட்டது என்றனர்.   …

The post மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: