72 பேருக்கு வைப்பு தொகை ரசீது

தர்மபுரி, ஆக. 9: தர்மபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கான வைப்பு தொகை ரசீது வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. 72 பயனாளிகளுக்கு வைப்பு தொகை ரசீதை கலெக்டர் சாந்தி வழங்கி பேசியதாவது: முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டம் 2 பெண் குழந்தைகளுடன் அல்லது ஒரு பெண் குழந்தையுடன் அல்லது முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், 2வது பிரசவத்தில் 2 பெண் குழந்தையும் பிறந்து, பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடும்பங்களுக்கு, ஒரு பெண் குழந்தைக்கு தலா ₹25 ஆயிரம் வீதமும், ஒரே பெண் குழந்தையெனில் ₹50 ஆயிரம் எனவும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் வைப்புத்தொகை ரசீது வழங்கப்பட்டு, குழந்தைகளுக்கு 18 வயது முடிந்தவுடன், முதிர்வுத்தொகை பெற்றுக்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பெண்சிசு கொலை தடுக்கப்படுகிறது. பெண் கல்வி ஊக்குவிக்கப் படுகிறது. குழந்தை திருமணம் தடுக்கப் படுகிறது. அதன் அடிப்படையில், தர்மபுரி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், 2023-2024ம் நிதியாண்டில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த, 72 பயனாளிகளுக்கு இணையவழியில் ஒப்புதல் வழங்கப்பட்டு, விண்ணப்பம் ஏற்பு செய்யப்பட்டு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பியதற்கான செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2ம் செவ்வாய்கிழமை கலெக்டர் அலுவலக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமில், திட்டத்தில் விண்ணப்பித்து வைப்புத்தொகை ரசீதுகள் கிடைக்க பெறாமல் உள்ள பயனாளிகள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்தும், முதிர்வுதொகை கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் ஆகியோர் உரிய சான்றுகளோடு ஆஜராகி பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post 72 பேருக்கு வைப்பு தொகை ரசீது appeared first on Dinakaran.

Related Stories: