கடலாடி அருகே சுற்றுவட்டார கிராமங்களில் சேதமடைந்த சமுதாய கூடங்களை அகற்ற கோரிக்கை

சாயல்குடி, ஆக. 9: கடலாடி அருகே சுற்று வட்டார கிராமங்களில் சேதமடைந்த சமுதாய கூடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி ஒன்றியம், இளஞ்செம்பூர் பஞ்சாயத்திற்கு காவல்நிலையம் அருகிலும், கண்டிலான் பஞ்சாயத்திற்கு நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகிலும் சமுதாயக்கூடம் கட்டிடங்கள் கட்டப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

இதனை பஞ்சாயத்திலுள்ள கிராமமக்கள் காதணி விழா, திருமணம் உள்ளிட்ட ஏழை குடும்ப விஷேசங்கள், கிராம திருவிழா, அரசு துறை சார்ந்த கூட்டங்கள், நலத்திட்ட உதவி வழங்கும் விழாக்கள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் சார்ந்த கிராம சபா உள்ளிட்ட கூட்டங்கள், மகளிர் குழு கூட்டங்கள் உள்ளிட்ட கூட்டங்கள் நடந்து வந்தது. இதனால் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒரு முறை மராமத்து செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் கடந்து விட்டால் மேற்கூரை சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதனை போன்று பக்கவாடுகள், சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.

கழிப்பறை என கட்டிடம் முழுவதும் சேதமடைந்ததால் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடின்றி கிடக்கிறது. கட்டிடம் பாதுகாப்பின்றி திறந்து கிடப்பதால் விபத்து அச்சம் தெரியாமல் சிறுவர்கள் உள்ளே சென்று விளையாடி வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளும் அடைந்து வருகிறது. எனவே விபத்து ஏற்படும் முன்பாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் அரசு சார்பில் தற்போது நவீன வசதிகளுடன் கூடிய புதிய சமுதாயக் கூடம் கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளஞ்செம்பூர் மற்றும் நெடுங்குளம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கடலாடி அருகே சுற்றுவட்டார கிராமங்களில் சேதமடைந்த சமுதாய கூடங்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: