முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டில் 9-வது தேசிய கைத்தறி நாள் சென்னை, எழும்பூர், கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் கொண்டாடப்பட்டது: அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7-ம் தேதி அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாரம்பரியம் மற்றும் நமது கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் தன்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2015-ம் ஆண்டு முதல் தேசிய கைத்தறி நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டில், 07.08.2023 அன்று 9-வது தேசிய கைத்தறி நாள் சென்னை, எழும்பூர், கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் சட்டமன்ற அறிவிப்பின்படி கைத்தறி நெசவின் மூலம் தயார் செய்யப்படும் துப்பட்டாக்கள், பைகள், வீட்டு உபயோகத் துணிகள் மற்றும் தோடர் கை வேலைபாடு துணி இரகங்கள் உள்ளிட்ட பிரத்யேகமான கைத்தறி விற்பனை செய்ய கோ-ஆப்டெக்ஸில் கைத்தறி அலங்கார பொருட்கள் விற்பனை நிலையம் (Handloom Accessories Shop) கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இளம் கைத்தறி நெசவாளர்களுக்கான நெசவு பயிற்சி மையம் நெசவு தொழில் சார்ந்த தொழில் முனைவோராக மாற்றுவதற்காகவும்,சென்னை கோ-ஆப்டெக்ஸில் நெசவாளர் பயிற்சி மையம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டு 20 நபர்களுக்கு பயிற்சி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.

கைத்தறி துணி இரகங்களை மதிப்பு கூட்டி உள்நாட்டில் சந்தைப்படுத்துவது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கூடிய வகையில் கைத்தறி இரகங்களுக்கு அதிக விற்பனை விலை ஈட்டும் பொருட்டு,கைத்தறி துணி 1) எம்ப்ராய்டரி பயிற்சி மையம், 2) கைத்தறி துணி அச்சிடுதல் பயிற்சி மையம், 3) கைத்தறி துணி சிக்கன்காரி எம்ப்ராய்டரி பயிற்சி மையம் மற்றும் 4) கைத்தறி துணி ஆரி(AAri) வேலைபாடு பயிற்சி மையம் கோ-ஆப்டெக்ஸில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், துறையின் வடிவமைப்பு மேம்பாடு முயற்சியின் ஒரு பகுதியாக கைத்தறி இரகங்களில் சந்தைப்படுத்த கூடிய இரகங்களை உற்பத்தி மேற்கொள்ள ஏதுவாகவும், நவீன காலத்திற்கேற்ப கைத்தறி இரகங்களில் நவநாகரீக வடிவமைப்புகளை உடுத்தும் பொருட்டு தேசிய வடிவமைப்பு மையம், அகமாதாபாத் மற்றும் தேசிய ஆடை அலங்கார வடிவமைப்பு நிறுவனம், பெங்களூரு மற்றும் சென்னை ஆகியவை மூலம் உருவாக்கப்பட்ட 1000 புதிய வடிவமைப்புகள் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் ஒன்பதாவது தேசிய கைத்தறி திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

மேற்படி புதிய வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்ட கைத்தறி பட்டு மற்றும் பருத்தி சேலை இரகங்களை வாடிக்கையாளர்கள் தாம் விரும்பும் வடிவமைப்புகளை உண்மையிலேயே தாம் அணிவது போன்று மெய்நிகர் காட்சி மூலம் (Virtual Reality) ஆடைகளை தேர்வு செய்துக்கொள்வதற்கு ஏதுவாக கோ-ஆப்டெக்ஸில் நிறுவப்பட்டுள்ள மெய்நிகர் ஆடை அலங்கார கணினி வசதி மையத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. ஜவுளித் தொழிலின் நுட்பங்கள், வடிவமைப்பு மற்றும் காலமாற்றத்திற்கேற்ற வண்ணங்களின் போக்கினை கணித்தல் ஆகியவற்றில் பங்களிப்பு திறன் கொண்ட வடிவமைப்பாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டும், தமிழ்நாடு அரசால் 2022-23-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநில அளவிலான சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது வகையில், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்ற முதல் மூன்று விருதாளர்கள் போக 22 இளம் வடிவமைப்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரூ.10,000/- வீதம் ஊக்கத்தொகை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் வழங்கப்பட்டது.

முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 20 பயளாளிகளுக்கு ஓய்வூதிய ஆணையும், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு கடனுதவி ஆணையும் மற்றும் நெசவாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு வீட்டு மனை பதிவு ஆணையும் இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சரால் வழங்கப்பட்டது. மேலும், தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு கைத்தறி துறை சார்பாக மாவட்ட அளவில் கொண்டாடப்பட்ட விழாக்களில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 33 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணையும், நெசவாளர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 304 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடி கடனுதவி ஆணையும், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.49.16 இலட்சம் மற்றும் நெசவாளர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 18 நகர்புற பயனாளிகளுக்கு வீடுகட்டும் பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரின் சட்டமன்ற அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் கதர் மற்றும் கைத்தறி இரகங்களின் தனித்தன்மை, கலை நுணுக்கம், பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதன் விற்பனையினை ஊக்குவிக்கவும் கைத்தறி இரகங்களை பிரபலப்படுத்தும் திட்டம் (Handloom Outreach Programme) செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் கைத்தறி தொழில் முனைவோர்களாக உருவாக இயலும். மேலும் கலைஞர் நூற்றாண்டு விழவினை முன்னிட்டு கைத்தறி துறை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் இணைந்து 100 கல்லூரிகளில் இத்திட்டனை செயல்படுத்த திட்டமிடப்பட்டு, தேசிய கைத்தறி நாளன்று 30 கல்லூரிகளில் விழப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும் கைத்தறி நெசவாளர்களின் நலனை முன்னிட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை உதவியுடன் 60 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

இவ்விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு, சென்னை பெருநகர மேயர் ஆர். பிரியா, மதிப்பிற்குரிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ. பரந்தாமன், மதிப்பிற்குரிய சென்னை பெருநகர துணை மேயர் எம்.மகேஷ் குமார், மதிப்பிற்குரிய பெருமாநகர சென்னை மாநகராட்சி 61வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாத்திமா முசாபர் அஹமது, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., கைத்தறி துறை ஆணையர் கே. விவேகானந்தன் இ.ஆ.ப., துணிநூல் துறை ஆணையர் முனைவர். மா. வள்ளலார், இ.ஆ.ப., தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய முதன்மை செயல் அலுவலர் முனைவர். சீ. சுரேஷ்குமார், இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள் மற்றும் கோஆப்டெக்ஸ் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டில் 9-வது தேசிய கைத்தறி நாள் சென்னை, எழும்பூர், கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் கொண்டாடப்பட்டது: அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: