அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ராஜிவ்காந்தி சாலையில் 4 இடங்களில் ₹459.32 கோடியில் புதிய மேம்பாலம்: 2 ஆண்டுகளில் முடிக்க திட்டம்

சென்னை, ஆக.6: ராஜிவ்காந்தி சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து, ₹459.32 கோடியில் 4 புதிய மேம்பாலங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் பிரதான போக்குவரத்து தடமாக இருக்கும் ராஜிவ்காந்தி சாலையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி இந்த சாலையில் வந்து செல்கின்றன. இதனால், இந்தச் சாலையில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளும் நடைபெற்று வருவதால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, தினசரி அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர். அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ்கள் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. டைடல் பார்க்கில் தொடங்கி சிறுச்சேரி வரை உள்ள ஏராளமான ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலானோர் நகரின் பல்வேறு பகுதியில் வசிப்பதால் அவர்களை ‘பிக் அப்’ மற்றும் ‘டிராப்’ செய்ய நிறுவனங்கள் சார்பில் கேப் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கேப்கள் ராஜிவ்காந்தி சாலையை பயன்படுத்தி வருவதால், பீக் அவர்சில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே, இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில், ராஜிவ்காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக, ₹459 கோடியில் 4 புதிய மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் அதிகளவில் உள்ள ராஜிவ்காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் வந்ததால், சாலையில் வாகனப் போக்குவரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, தரமணி- எஸ்.ஆர்.பி டூல்ஸ் சந்திப்பு, எம்.ஜி.ஆர் சாலை – பெருங்குடி, துரைப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பு, சோழிங்கநல்லூர் சந்திப்பு ஆகிய இடங்களை கடப்பது மிகுந்த சிரமமான விஷயம். அந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும். பீக் அவர்சில், இந்த முக்கிய சந்திப்புகளில் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இந்தநிலையில், மேற்கூறிய 4 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இப்பணியை, 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலங்களுக்கான செலவு ₹459.32 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசு ₹331 கோடியை பங்களிக்கும், அதற்கான முதல் தவணையாக தமிழக அரசு ₹50 கோடியை வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கும். 2 நிறுவனங்களும் தனித்தனியாக வேலை செய்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். அதனைத் தவிர்க்க 2 நிறுவனங்களும் சேர்ந்து செயல்பட உள்ளன. மெட்ரோ ரயில் கட்டுமானத்துடன் ஒரே நேரத்தில் பணியை மேற்கொண்டால், அதை முடிக்க எடுக்கும் நேரம் குறையும்,” என்றனர்.

n தரமணி- எஸ்.ஆர்.பி டூல்ஸ் சந்திப்பு, எம்.ஜி.ஆர் சாலை – பெருங்குடி, துரைப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பு, சோழிங்கநல்லூர் சந்திப்புகளில் புதிய பாலங்கள் அமைகிறது.
n 4 புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு ₹331 கோடிக்கு அனுமதி அளித்துள்ளது. அதற்கான முதல் தவணையாக ₹50 கோடியை தமிழக அரசு
வழங்கியுள்ளது.

இறுதிகட்டத்தில் ‘யு’ வடிவ பாலம்
ராஜிவ்காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ‘யு’ வடிவில் ₹108 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக இந்த மேம்பாலப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு இந்த மேம்பாலப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

வடிவமைப்பு தயார்
மெட்ரோ ரயில் பாதையுடன் இணைக்கப்பட உள்ள மேம்பாலங்களுக்கான வடிவமைப்புகளை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. மேம்பாலங்கள் முதல் நிலையிலும், மெட்ரோ ரயில் பாதைகள் இரண்டாவது நிலையிலும் இருக்கும். இதற்கிடையில், மெட்ரோ ரயில் பணிகளால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். சாலை ஏற்கனவே நெரிசல் மிகுந்து உள்ளது. மேலும் மாற்று வழிகள் இல்லை. இந்த மேம்பாலங்கள் கட்டும் போது, ​​வாகன ஓட்டிகள் தேவையற்ற சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ராஜிவ்காந்தி சாலையில் 4 இடங்களில் ₹459.32 கோடியில் புதிய மேம்பாலம்: 2 ஆண்டுகளில் முடிக்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: