ராகுல் காந்தியின் இந்த பேச்சு, குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாக கூறி, குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாஜ எம்எல்ஏ புர்னேஷ்மோடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 23ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. ராகுல்காந்தி குற்றவாளி என நீதிபதி எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார். அத்துடன், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். எனினும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ஜாமீன் வழங்கியதோடு தண்டனையை ஒரு மாத காலத்திற்கு நிறுத்திவைத்தார்.
தீர்ப்பு கூறப்பட்ட மறுநாளே ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை லோக்சபா செயலகம் பறித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ இரண்டு ஆண்டு அல்லது அதற்கு மேலாக சிறை தண்டனை பெற்றால் அவரது மக்கள் பிரதிநிதி பொறுப்பு பறிக்கப்படும். இந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக லோக்சபா செயலகம் அறிவித்தது. ராகுல்காந்தி, தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் உருவானது. ராகுல்காந்திக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டால் மட்டுமே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உள்ளது.
இதனால், ராகுல் காந்தி தண்டனையை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்ற ராகுல்காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கு நேற்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பாஜவின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டதாக காங்கிரஸ் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘‘ராகுல்காந்தி வழக்கில் நீதி வென்றது. ராகுல்காந்தியை வயநாடு தக்கவைக்கிறது. குற்றவியல் அவதூறு வழக்கில், ராகுல்காந்திக்கு எதிரான தண்டனையை நிறுத்திவைத்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, நமது நீதித்துறையின் வலிமை மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான நமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது’’ என பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘‘பாஜவின் சதி முற்றிலும் அம்பலமாகியுள்ளது. இந்திய அரசியலமைப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. உண்மை மட்டுமே வெல்லும். நீதி, ஜனநாயகம், சத்தியம் வென்றுள்ளது’’ என்றார். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம், ராகுல்காந்தியின் அரசியல் பயணம் தொடரவும், நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவும் இனி தடை ஏதும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
The post ஜனநாயகம் வென்றது appeared first on Dinakaran.