தெற்கு கள்ளிகுளத்தில் பிரசித்தி பெற்ற அதிசய பனிமாதா பேராலய திருவிழாவில் இன்று தேர்ப்பவனி

நெல்லை : தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்திருவிழா கடந்த 27ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை திருயாத்திரை திருப்பலியும், இரவு மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. ஆக.2ம்தேதி 7ம் திருவிழாவன்று காலை மாதா காட்சி கொடுத்த மலையில் திருப்பலியும், தொடர்ந்து அசன உணவு வழங்கப்பட்டது.

3ம்தேதி அன்று காலை 6 மணிக்கு மும்பை வாழ் களிகை சங்கம் சார்பில் மராத்தான் போட்டியும், 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் பள்ளி மாணவர்களுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு ஆயர் தலைமையில் நற்கருணைப் பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் நற்கருணை நாதரை ஆயர் கையில் வைத்தபடி ரதத்தில் அமர்ந்திருந்தார். இதனையடுத்து நற்கருணைப்பவனி ரதவீதிகளில் வலம் வந்து ஆலயத்தை வந்தடைந்தது.

இதில் திரளானோர் பங்கேற்றனர். அதன்பின் ஆயர் தலைமையில் சிறப்பு நற்கருணை ஆசீர் நடந்தது. 9ம் திருவிழாவான இன்று 4ம்தேதி காலை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குருவானவர் பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பு திருப்பலியும், காலை 11.30 மணிக்கு அருட்தந்தையர்கள் கிறிஸ்டியான், பீட்டர் பாஸ்டியன், வில்லியம் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது.

மாலை 6.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு நற்கருணை ஆசீரும், நள்ளிரவு 12 மணிக்கு மலையாளத் திருப்பலியும் அதன்பின் அதிசய பனிமாதா அன்னையின் அலங்காரத் தேர்ப்பவனியும் நடைபெறுகிறது. 10ம் திருவிழாவான 5ம்தேதி காலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், பிற்பகல் 2 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது.

6ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை நன்றி திருப்பலியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்குதந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்குதந்தை ஜாண்ரோஸ் மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.

The post தெற்கு கள்ளிகுளத்தில் பிரசித்தி பெற்ற அதிசய பனிமாதா பேராலய திருவிழாவில் இன்று தேர்ப்பவனி appeared first on Dinakaran.

Related Stories: