உடுமலை பகுதியில் தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதல்: வேளாண் பல்கலை. விஞ்ஞானிகள் ஆய்வு

 

உடுமலை, ஆக. 2: உடுமலை அருகேயுள்ள சின்னபொம்மன் சாலை, வாழவாடி, ஆர்.வேலூர், புங்கமுத்தூர் பகுதிகளில் தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வேளாண் பல்கலை. பூச்சியியல் துறை பேராசிரியர் நெல்சன், நோயியல் துறை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து, வேளாண் உதவி இயக்குநர் தேவி கூறியதாவது: இந்த வண்டுகள் தென்னங்குருத்து பகுதியில் சுரண்டுவதால் மழைநீர் தேங்கி பூஞ்சாணம் உருவாகி குருத்தழுகல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த காப்பர் ஆக்சிகுளோரைடு ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கிராம் வீதம் கலந்து, அனைத்து மரங்களுக்கும் ஊற்றவேண்டும்.

காண்டாமிருக வண்டின் புழுவானது வெண்மைநிறத்தில் சாணக்குழிகளில் வாழ்ந்து வண்டாக வெளிவரும். எனவே, வேளாண்மை விரிவாக்க மையத்தில், விநியோகம் செய்யப்படும் மெட்டாரைசியம் எனும் பசும் பூஞ்சாணம் கால் கிலோவை முக்கால் லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். கருப்பு நிற காண்டாமிருக வண்டை, மண் பானையில் 5 லிட்டர் நீருடன், ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு கலந்து, தோப்பில் ஆங்காங்கே வைத்து கவர்ந்து அழிக்கலாம்.வேப்பங்கொட்டைத் தூளையும், மணலையும் 1:2 என்ற விகிதத்தில் கலந்து, மரத்துக்கு 150 கிராம் வீதம் நடுக்குருத்தின் 3 மட்டை இடுக்குகளில் வைத்தும் கட்டுப்படுத்தலாம். பசுஞ்சாணம் போடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post உடுமலை பகுதியில் தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதல்: வேளாண் பல்கலை. விஞ்ஞானிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: