ஒன்றிய அரசை கண்டித்து
கடலூர், ஜூலை 26: ஒன்றிய அரசை கண்டித்து கடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், அதை தடுக்க தவறிய ஒன்றிய அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் அறிவித்து இருந்தனர். அதன்படி அங்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு வந்தனர். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட துணை செயலாளர் குளோப் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நாகராஜ், நகர துணை செயலாளர் பாக்கியம், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒன்றிய அரசை கண்டித்தும், மணிப்பூர் அரசை கண்டித்தும், மணிப்பூர் முதல்வரை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி அப்புறப்படுத்தினர். மேலும் மறியலில் ஈடுபட்ட 23 பேரை கைது செய்தனர்.
The post இந்திய கம்யூனிஸ்ட் ரயில் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.
