நாளை மாலை 5 மணி வரை ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: நாளை மாலை 5 மணி வரை ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என தகவல் பரவியது. இதனை தொடர்ந்து மசூதியில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மசூதி வளாகத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தவும், ஆகஸ்டு 4ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும், மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்ட பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதனால், அந்த பகுதியை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து ஞானவாபி மசூதி வளாகத்திற்குள் தொல்லியல் துறையின் ஆய்வு நேற்று தொடங்கியது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே பி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,’ ஞானவாபி மசூதியில் நாளை மாலை 5 மணி வரை தொல்லியல்துறை ஆய்வு நடத்தக்கூடாது. மசூதி கமிட்டி இதுபற்றி மேல்முறையீடு செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகலாம். மனுதாரர்கள் 227 வது பிரிவின் கீழ் மனு அல்லது விண்ணப்பத்துடன் உயர் நீதிமன்றத்திற்குச் சென்றால், அந்த மனு பொருத்தமான அமர்வு முன் விசாரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

* 30 பேர் குழு ஆய்வு நிறுத்தம்
ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல்துறையை சேர்ந்த 30 பேர் குழு நேற்று காலை 7 மணிக்கு உள்ளே நுழைந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் உடனே ஆய்வு நிறுத்தப்பட்டது. இதை வாரணாசி டிவிஷனல் கமிஷனர் கவுஷல் ராஜ் சர்மா அறிவித்தார்.

The post நாளை மாலை 5 மணி வரை ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Related Stories: