குளித்தலை – மணப்பாறை சாலையில் வலுவிழந்து காணப்படும் ரெட்டை வாய்க்கால் பாலம்

 

குளித்தலை, ஜூலை 20: கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை சாலையில் வை.புதூர் அருகே இரட்டை வாய்க்கால் செல்கிறது. இதில் ஒரு பகுதி வாய்க்காலில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வாய்கால்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்துக்கு விடப்பட்டிருந்தது. அதே பகுதியில் அருகில் மற்றொரு வாய்க்கால் பழுதடைந்த நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து, மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி, குற்றாலம், திண்டுக்கல் பழனி தேனி கம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் பெரம்பலூரில் இருந்து திருச்சி வழியாக செல்லாமல், பெரம்பலூர், துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, புத்தாநத்தம் துவரங்குறிச்சி, சென்று கொட்டாம்பட்டி, மேலூர் வழியாக மதுரை செல்வதால் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் மிச்சமாகிறது. அதேபோல் மணப்பாறை வழியாக திண்டுக்கல், தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்கு போக்குவரத்து நேரமும் குறைகிறது என்பதால் சமீப காலமாக சென்னையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பெரம்பலூர், துறையூர், குளித்தலை வழியாக இந்த ரெட்டை வாய்க்கால் பாலம் வழியாக தினந்தோறும் சரக்கு வாகனங்கள் கனரக வாகனங்கள், சுற்றுலா பயணிகள் வாகனம், ஏராளமான நான்கு சக்கர வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கணக்கில் தினந்தோறும் செல்கிறது.

மேலும். நெடுஞ்சாலைத்துறை நீண்ட நாட்களாக சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் திருச்சிக்கு செல்லாமல் பெரம்பலூர், துறையூர், குளித்தலை, மணப்பாறை வழியாக துவரங்குறிச்சி சென்றடையும் வகையில் சாலையை அகலப்படுத்தி வாகன போக்குவரத்து விடுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்காக பெரம்பலூரில் இருந்து குளித்தலை வழியாக துவரங்குறிச்சி வரை உள்ள சாலைகளில் குறுகிய பாலமாக இருப்பதை அகலப்படுத்தி புதிய பாலங்கள் ஏராளமாக கட்டப்பட்டிருந்தது. அதே வரிசையில் தான் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரெட்டை வாய்க்கால் பாலமும் உள்ளது. இதில் ஒரு பகுதி பாலம் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு உள்ளது. மற்றொரு பாலம் வலுவிழுந்த நிலையில் அவ்வப்போது நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பாலத்தில் உள்ள இடிந்த நிலையில் இருக்கும் பாலத்தில் சிமெண்ட் பூசப்பட்டு மறுசீரமைப்பு செய்து வந்தனர். இந்தபாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்வதால் பாலத்தின் உறுதித்தன்மை வலுவிழந்த காரணத்தால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தின் அடியே இரும்பு கம்பிகளால் ஆன தூண்கள் அமைத்து முட்டுக் கொடுத்து வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நேரத்தில் இந்த பாலம் வலுவிழந்த நிலையில் இருப்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அதனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக வை.புதூர் ரெட்டை வாய்க்கால் பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post குளித்தலை – மணப்பாறை சாலையில் வலுவிழந்து காணப்படும் ரெட்டை வாய்க்கால் பாலம் appeared first on Dinakaran.

Related Stories: