டெல்லியில் நடந்த கூட்டத்திற்கு அழைக்காமல் பாஜ மேலிடம் நிராகரித்ததால் சந்திரபாபு கடும் `அப்செட்’: அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை

திருமலை: டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் பாஜ மீது சந்திரபாபு கடும் அதிருப்தியடைந்துள்ளார். இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்த ேதர்தலில் பாஜவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் `இந்தியா’ என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் வியூகத்தை உடைத்து மீண்டும் ஆட்சிக்கு வர ேதசிய ஜனநாயக கூட்டணி டெல்லியில் நேற்று 38 கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியது.

இந்நிலையில் ஆந்திராவில் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடக்க உள்ளது. இதில் பாஜ, தெலுங்குதேசம், ஜனசேனா கூட்டணி இணைந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த மாதம் 2 முறை தெலுங்கு தேச தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு டெல்லி சென்று பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். அதற்கேற்ப ஆந்திராவில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் ெஜகன்மோகனை மட்டும் முதன்முறையாக விமர்சித்து பேசினர். இதன்மூலம் பாஜ கூட்டணியில் தெலுங்கு தேசம் கண்டிப்பாக இணைந்துவிடும் என சந்திரபாபு நம்பினார். ஆனால் டெல்லியில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் ஆந்திராவில் இருந்து ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன்கல்யாணுக்கு மட்டுமே பாஜ மேலிடம் அழைப்பு விடுத்திருந்தது. சந்திரபாபுவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதுகுறித்து பவன்கல்யாண் டெல்லியில் அளித்த பேட்டியில், `பாஜவும் ஜனசேனாவும் மீண்டும் இணைந்தாலும், தெலுங்கு தேசம் மற்றும் பாஜ இடையே புரிந்துணர்வு பிரச்னை உள்ளது. அவர்களின் பிரச்னைகளை பேசுவது ஏற்புடையது அல்ல’ என கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்காததால் சந்திரபாபு கடும் அப்செட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு நடைபெறும் ேதர்தலில் எப்பாடுபட்டாவது ஆட்சிக்கு வந்து விடவேண்டும் என சந்திரபாபு, பாஜவை நாடி கூட்டணி கணக்கு போட்டு வந்தார். ஆனால் பழைய சம்பவங்களை பாஜ இன்னும் மறக்காததால் (கடந்த 2019ல் கூட்டணியில் இருந்து திடீரென வெளியேறி மத்திய பாஜ அரசு மீது தெலுங்கு தேச கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது) மீண்டும் பழைய நண்பனை கூட்டணியில் சேர்க்க பாஜ தயக்கம் காட்டி வருகிறது.

தற்போது கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்திற்கும் சந்திரபாபுவை முழுமையாக நிராகரித்து ஜனசேனா தலைவரை மட்டுமே பாஜ அழைத்துள்ளது. எனவே ஆந்திர சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் தனித்து போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அடுத்தக்கட்ட முடிவு குறித்து சந்திரபாபு, தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசிக்க தொடங்கியுள்ளார். பாஜ தங்களை தவிர்த்திருப்பதால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் `இந்தியா’ என்கிற கூட்டணியில் இணையலாமா? எனவும் அவர் ஆலோசிக்க தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

* பின்னணியில் ஜெகன்மோகன்?

பாஜ, ஜனசேனாவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து தேர்தல் களம் காண சந்திரபாபு திட்டம் போட்டு வந்தார். இதனால் ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு, அடுத்த தேர்தலில் வெற்றிபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென டெல்லி சென்ற ஆந்திர முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜ மூத்த தலைவர்களை சந்தித்துவிட்டு திரும்பினார். இதன்பின்னர் சந்திரபாபுவுடன் நெருக்கம் காட்டுவதை பாஜ முழுமையாக நிறுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. பாஜ மூத்த தலைவர்கள் உட்பட பலர் ஜெகன்மோகனை கடுமையாக விமர்சித்தாலும், கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் இதுவரை ஒன்றிய பாஜவை ஒருமுறை கூட எதிர்த்து பேசாமல் பல சர்ச்சைக்குரிய மசோதாக்கள், திட்டங்களுக்கு முதல் ஆளாக ஜெகன் ஆதரவு அளித்துள்ளார்.

எனவே தற்போது வரை கூட்டணியில் இருந்து வெளியேறி தனக்கு துரோகம் செய்த சந்திரபாபுவைவிட அனைத்து திட்டங்களுக்கும் முதல் ஆளாக ஆதரவுதரும் ஜெகன்மோகனை பாஜ நம்புவதால் அவருக்கு எதிரியான சந்திரபாபுவுடன் சேர்ந்து தேர்தல் களம் கண்டு தர்மசங்கடத்தை அவருக்கு ஏற்படுத்த பாஜ மேலிடம் விரும்பவில்லை என்றும், எனவே ஜெகன்மோகன் மீண்டும் ஆட்சியில் அமரும்வகையில் சந்திரபாபுவை கூட்டணியில் சேர்க்காமல் கைவிட்டதாகவும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post டெல்லியில் நடந்த கூட்டத்திற்கு அழைக்காமல் பாஜ மேலிடம் நிராகரித்ததால் சந்திரபாபு கடும் `அப்செட்’: அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: