சதுரகிரி மலையில் 2வது நாளாக எரியும் காட்டுத் தீ.. சிக்கியுள்ள பக்தர்களை மீட்க தீவிர முயற்சி..!!

விருதுநகர்: சதுரகிரி மலையில் நாவலூத்து பகுதியில் பற்றிய காட்டுத் தீ இன்னும் கட்டுக்குள் வரவில்லை. 2வது நாளாக எரியும் காட்டுத் தீயால் மலைக்கோவிலில் சிக்கியுள்ள பக்தர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் சாப்டூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் சிவலிங்கம் கழுத்து பகுதி சாய்ந்த நிலையில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இக்கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டும் வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, ஆடி அமாவாசையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சதுரகிரி மலைக்கோவிலில் தரிசனம் செய்ய சென்றனர். இதனிடையே மலைப் பாதையில் திடீரென காட்டுத் தீ பரவ தொடங்கியது. காற்றின் வேகமும் அதிகமாக இருந்தததால் மூங்கில் ஒன்றோடொன்று உரசி தீப்பற்றியது. 3 ஆயிரம் பக்தர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். 1,000க்கும் அதிகமான பக்தர்கள் மலைக்கோயிலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தீயை கட்டுப்படுத்தும் பணியில் 30க்கும் அதிகமான வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 2 நாள் ஆகியும் தீ கட்டுக்குள் வராததால் சதுரகிரி மலையில் இருந்து கீழே இறங்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 2வது நாளாக பக்தர்கள் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தால் பக்தர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரம் தீயை முழுமையாக அணைத்த பிறகு சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.

The post சதுரகிரி மலையில் 2வது நாளாக எரியும் காட்டுத் தீ.. சிக்கியுள்ள பக்தர்களை மீட்க தீவிர முயற்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: