சென்னங்காரணி ஊராட்சியில் திரவுபதியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

ஊத்துக்கோட்டை: சென்னங்காரணி ஊராட்சியில் உள்ள மேட்டு கண்டிகை கிராமத்தில் நேற்றுமுன்தினம் திரவுபதி அம்மன் திருக்கோயிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் 274 பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம், சென்னங்காரணி ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுகண்டிகை, பள்ளகண்டிகை கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தீ மிதி திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின. இதைத் தொடர்ந்து 2வது நாள் பகாசூரன் வதம், 3வது நாள் திருக்கல்யாணம், 4ம் நாள் நச்சுக்குழி யாகம், 5ம் நாள் அரக்கு மாங்கோட்டை, 6வது நாள் அர்ஜுனன் தபசு, 7வது நாள் தர்மராஜா வீதியுலா, 8வது நாள் மாடுபிடி சண்டை, 9ம் நாள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில், திரவுபதியம்மன் திருக்கோயிலில் 10ம் நாளான நேற்றுமுன்தினம் கிராம எல்லையில் இருந்து உற்சவரான திரவுபதி அம்மன் டிராக்டரில் ஊர்வலமாக தீ மிதிக்கும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன் காப்பு கட்டி, மஞ்சள் ஆடை அணிந்து விரதம் இருந்த 274 பக்தர்கள் அம்மனுடன் ஊர்வலமாக, அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கடைசி நாளான நேற்று முன் தினம் அரவான் இறுதி சடங்கு நிகழ்ச்சியுடன், திரவுபதி அம்மன் கோயிலில் கொடி இறக்கப்பட்டு தீ மிதி விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. இதில் சென்னங்காரணி, மேட்டுகண்டிகை, பள்ளகண்டிகை, பெரம்பூர் உள்பட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

The post சென்னங்காரணி ஊராட்சியில் திரவுபதியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: