ஒகேனக்கல்லில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

பென்னாகரம், விடுமுறை தினமான நேற்று, ஒகேனக்கல்லில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடக மாநிலம் குடகுமலை மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில், கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, அந்த அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் 9.8.19ம் தேதி ஒகேனக்கல் வந்தடைந்தது. அன்றைய தினம் இரவு, விநாடிக்கு 35 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மறுநாள் (10ம் தேதி) 90 ஆயிரம் கனஅடியானது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல்லில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Advertising
Advertising

அங்குள்ள ஐவர்பாணியை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டியது. மேலும், மெயினருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட நீர்நிலைகள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு தண்ணீர் ஆர்ப்பரித்தது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும், ஆற்றில் தடுப்புகள் ஏற்படுத்தி வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தடை அறிவிப்பு குறித்த தகவல் தெரியாமல் வெளியிடங்களிலிருந்து சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்தது. ஆனாலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதான தடை விலக்கிக் கொள்ளப்படவில்லை.

பரிசல் பயணத்திற்கும் தடை நீடித்தது. தற்போது, நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது. இதனால், ஆற்றில் மட்டும் குளித்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறையையொட்டி, நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் சுற்றுலா வந்திருந்தனர். இதேபோல், தர்மபுரி மாவட்டம் முழுவதிலுமிருந்தும், அண்டைய மாவட்டங்களான கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு உள்ளிட்ட இடங்களிலிருந்தும் நேற்று 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் திரண்டனர். இதனால், எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 9 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால், முதலைப்பண்ணை மற்றும் சத்திரம் பகுதியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

Related Stories: