புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவர சுவர் ஓவியங்கள் உருவாக்கம்

புதுச்சேரிக்கு தினந்தோறும் வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஆவலுடன் சுற்றிப்பார்க்கும் இடம் கடற்கரை தான். இங்கு மண் அரிப்புக்காக கரையில் கொட்டப்பட்டுள்ள பாறைகளின் மீது நின்று கடலின் அழகை கண்டு களிப்பது வழக்கும்.

Advertising
Advertising

சுற்றுலா பயணிகளுக்காக தலைமைச் செயலகம் அருகே செயற்கை மணல் பரப்பும் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் இயற்கை அழகு நிறைந்த கடற்கரை பகுதிகளான வீராம்பட்டணம், சின்ன வீராம்பட்டணம், சுண்ணாம்பாறு, ஆரோ பீச் போன்ற பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அழகிய கட்டிடங்கள் அதிக அளவில் புதுச்சேரியில் உள்ளது. சிற்ப கலைகள் நிறைந்த கட்டிடங்களும் உள்ளன. சில கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. இவற்றையும் சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்துச்செல்கின்றனர். அந்த கட்டிடங்களின் முன்பாக நின்று புகைப்படம் எடுக்கவும் தவறுவதில்லை.

நகரின் மையப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் சில கல்வி நிறுவனங்களின் சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு உள்ளது. அவற்றுள் சில ஓவியங்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வேறு சில ஓவியங்கள் வேடிக்கையாகவும் வரையப்பட்டு உள்ளன.

அழகாக உள்ள இந்த ஓவியங்களை பார்க்கும் சுற்றுலா பயணிகள் அவற்றின் அருகில் நின்று விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொள்கின்றனர். இதைப்போல நகரின் பல பகுதிகளிலும் உள்ள சுவர்களில் ஓவியங்களுடன் கூடிய பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள், எந்த இடங்களுக்கு எப்படி செல்ல வேண்டும் என்பது போன்ற தகவல்களை எழுதியும், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் நல்ல தகவல்களையும் எழுதி வைத்தால் சிறப்பாக அமையும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, ஊசுடு ஏரி ஆகியவற்றில் வைத்து அழகு படுத்துவதற்காக கடப்பா கல்லில் பறவைகள், விலங்குகள் போன்றவற்றின் ஓவியங்களை புதுச்சேரி முருங்கப்பாக்கம் கைவினை பொருள் தயாரிக்கும் இடத்தில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

பாறாங்கல்லில் விலங்குகளின் உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு வருவது சிறப்பாக உள்ளது. இவ்வாறு செய்யப்படும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள பூங்காக்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

Related Stories: