தலைகுந்தா-பைக்காரா வரை புதர் செடிகள் அகற்ற கோரிக்கை

 

ஊட்டி, ஜூலை 15: ஊட்டி-கூடலூர் சாலையில் தலைகுந்தா முதல் பைக்காரா வரையில் இரு புறங்களிலும் புதர்கள் ஆக்கிரமித்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இதனால், இவ்வழிடத்தடத்தில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். குறிப்பாக, விடுமுறை நாட்கள், வார விடுமுறை நாட்களின்போது சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் அதிகமாக காணப்படும். இச்சமயங்களில் வாகன போக்குவரத்து மிக அதிகமாக காணப்படும்.

இந்நிலையில், ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தலைகுந்தா முதல் கூடலூர் வரையிலும் சுமார் 30 கிமீ தூரத்திற்கு வனங்களே அதிகம் உள்ளது. குறிப்பாக, தலைகுந்தா முதல் பைக்காரா வரையில் சாலையில் இரு புறங்களிலும் ஏராளமான கற்பூர மரங்கள் மற்றும் பைன் மரங்கள் ஆகியவை காணப்படுகிறது. இது தவிர சாலை யோரங்களில் தற்போது முட்புதர்கள் அதிகளவு வளர்ந்துள்ளன. இவைகள் பெரும்பாலான பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்துள்ளன. குறுகிய வளைவுகளில் புதர்செடிகள் அதிகம் வளர்ந்து சாலையை மறைத்துள்ளன. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. சில சமயங்களில் விபத்தும் ஏற்பட்டு வருகிறது.

தற்போது அவ்வப்போது இப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், சாலையோரங்களில் புதர் செடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இதனால், பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. எனவே, ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தலைகுந்தா முதல், பைக்காரா வரையில் சாலையோரங்களில் வளர்ந்துள்ள புதர் செடிகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், விழும் நிலையில் உள்ள கற்பூர மரங்கள் மற்றும் மரக்கிளைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post தலைகுந்தா-பைக்காரா வரை புதர் செடிகள் அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: