தொடர்மழை எதிரொலி: கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

சின்னசேலம், கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நீர் வருவதால் சென்னை, புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு செல்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் பெரியார், மேகம், எட்டியாறு, செருக்கல் போன்ற நீர் வீழ்ச்சிகள் உள்ளது. இதில் பெரியார், மேகம் நீர்வீழ்ச்சிகள் மட்டும் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக உள்ளது. அதிலும் மேகம் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க செல்ல வேண்டுமானால் நீண்ட தூரம் ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டும். இதனால் மேகம் நீர்வீழ்ச்சிக்கு பெரும்பாலும் வாலிபர்கள் கூட்டமே செல்லும். ஆனால் பெரியார் நீர்வீழ்ச்சி வெள்ளிமலை சாலையின் ஓரத்திலேயே உள்ளதால், இந்த நீர்வீழ்ச்சிக்குத்தான் பாண்டி, கடலூர் போன்ற வெளியிடங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கார், பஸ், டிராவல்ஸ் போன்ற வாகனங்களில் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.    

   

கல்வராயன்மலையில் கடந்த சில மாதங்களாக மழையின்மையின் காரணமாக பெரியார் நீர்வீழ்ச்சி வறண்டு காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் சென்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் தற்போது சீரான நீர்வரத்து உள்ளது. இதையறிந்த சென்னை, புதுவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கார், பைக் போன்ற வாகனங்களில் பெரியார் நீர்வீழ்ச்சிக்கு சென்றுஆனந்த குளியல் போட்டு செல்கின்றனர். மேலும், நேற்றுமுன்தினம், நேற்று என இருநாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் கள்ளக்குறிச்சி, கடலூர் பகுதியை சேர்ந்தவர்களும் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர்.

Related Stories: