களக்காடு-நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயண சுவாமி கோயில் ஆனி திருவிழாவில் தேரோட்டம்

 

களக்காடு, ஜூலை 11: களக்காடு அருகே நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயணசுவாமி கோயிலில் ஆனி திருவிழாவில் நடந்த தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். களக்காடு அருகே நடுச்சாலைப்புதூரில் உள்ள பழமைவாய்ந்த மன்ஆதிநாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் திருவிழா 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த ஜூன் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது. 8ம் நாளான கடந்த 7ம் தேதி பரிவேட்டை நடந்தது. இந்நிலையில் விழாவின் சிகரமான தேரோட்டம் நேற்று (10ம் தேதி) கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேஷ பணிவிடை நடத்தப்பட்டது.

தொடர்ந்து அய்யா நாராயணசுவாமி செண்டை மேளங்கள் முழங்க, சங்கு நாதம் இசைக்க தேரில் எழுந்தருளியதும் தேரோட்டம் துவங்கியது. இதில் களக்காடு மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் ‘அய்யா சிவ, சிவ, அரகரா, அரகரா’ என பக்தி முழக்கத்துடன் தேரை இழுத்து நிலையம் சேர்த்தனர். விழாவை முன்னிட்டு திருத்தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. தேரில் உலா வந்த மாய கலியறுக்கும் பரந்தாமன் நாராயணசுவாமிக்கு பக்தர்கள் சுருள் வைத்தனர். இதனிடையே பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் இலவசமாக மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ரங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post களக்காடு-நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயண சுவாமி கோயில் ஆனி திருவிழாவில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: