விளைச்சல் அதிகரிப்பு… விலை குறைவு கவலையில் எலுமிச்சை

 

திண்டுக்கல், ஜூலை 10: திண்டுக்கல் மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, வெள்ளோடு சுற்று பகுதிகளில் எலுமிச்சை பயிரிடப்படுகிறது. இங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சிறுமலை செட் பகுதிக்கு ஏலம் விடுவதற்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இங்கு வியாபாரிகள் ஏலம் எடுத்து விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் ஆந்திரா, மணப்பாறை பகுதிகளில் இருந்தும் எலுமிச்சை பழங்கள் கொண்டு வரப்படுகிறது.

தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், விலை வெகுவாக குறைந்துள்ளது. சிறுமலை செட்டில் கடந்த மாதம் ஒரு சிப்பம் (50கிலோ) ரூ.4000 முதல் ரூ.5000 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.900 முதல். ரூ.1200 வரை மட்டுமே விலை போனது. இதனால் வண்டி வாடகை, ஏற்ற, இறக்க ஆள் கூலி கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

கடந்த வாரம் வரை எலுமிச்சம்பழம் ஒரு பழம் 10 ரூபாய்க்கு விற்ற நிலையில் நேற்று எலுமிச்சை பழம் ஒன்று 2 ரூபாய்க்கு கடைகளில் விற்பனையானது. எலுமிச்சை பழம் விலை சரிவால் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். இது குறித்து வியாபாரி பரமன் கூறுகையில், கோடைமழை காரணமாக எலுமிச்சம் பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் அதன் பயன்பாடு குறைந்து உள்ளதால் விலையும் சரிவடைந்து வருகிறது. வரும் நாட்களில் எலுமிச்சை பழம் மேலும் விலை சரிய வாய்ப்புள்ளது. என்றார்.

The post விளைச்சல் அதிகரிப்பு… விலை குறைவு கவலையில் எலுமிச்சை appeared first on Dinakaran.

Related Stories: