ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய நெருக்கடிக்கு தீர்வு காணும் குழுவில் இந்தியா

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் குழுவில் இந்தியா இணைந்துள்ளதாக வௌியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகம் தற்போது சந்தித்து வரும் உணவு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய சவால்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்க உலகளாவிய நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் குழுவை ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைத்தது. இந்த குழுவில் ஜெர்மனி, பார்படாஸ், பங்களாதேஷ், இந்தோனேஷியா, செனகல், டென்மார்க் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவில் இந்தியா இணைய வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஐநா பொதுசெயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த அழைப்பை ஏற்று உலகளாவிய நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் குழுவில் இந்தியா இணைந்துள்ளதாக வௌியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வௌியுறவுத்துறை அமைச்சகம் வௌியிட்ட அறிவிப்பில், “ தீர்வு காணும் குழுவில் இணையும் இந்தியாவின் முடிவு இந்தியாவின் அதிகரித்து வரும் தலைமைத்துவ பண்பு, சமகால சவால்களை சமாளிக்கும் இந்தியாவின் அர்ப்பணிப்பு உணர்வை வௌிப்படுத்துகிறது. இந்தியாவின் பங்கேற்பு வளரும் நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். வளர்ச்சி சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை மேலும் அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய நெருக்கடிக்கு தீர்வு காணும் குழுவில் இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: