கேரளாவில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் கயிறு கட்டி மீட்பு: இன்றும் கன மழை தொடரும்

திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதற்கிடையே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தோட்டத் தொழிலாளர்கள் 17 பேர் கயிறு கட்டி மீட்கப்பட்டனர். கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழையால் கண்ணூர் மத்திய சிறை சுவர் இடிந்து விழுந்தது. பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் 135 ஆண்டு பழமையான கிறிஸ்தவ ஆலயம் நேற்று அதிகாலை இடிந்து விழந்தது.

அதிகாலையில் இடிந்ததால் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. கனமழையால் ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம் மாவட்டங்களில் தான் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் தர்ப்பணம் செய்ய சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிர் தப்பினர் 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தோட்டப்பள்ளி பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பீகார் தொழிலாளியின் உடல் நேற்று மீட்கப்பட்டது.

இதற்கிடையே நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கோட்டயம் மாவட்டம் முண்டக்கயம் அருகே உள்ள பெருவந்தானம் பகுதியில் உள்ள மணிமலை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் இருந்து செல்லும் கால்வாயிலும் வெள்ளம் அதிகரித்தது. இந்த கால்வாயின் மறுகரையில் ஒரு ரப்பர் தோட்டம் உள்ளது. வெள்ளம் காரணமாக இங்கு வேலைக்கு சென்ற 17 தோட்டத் தொழிலாளர்களால் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியினர் விரைந்து செயல்பட்டு கயிறு கட்டி 17 தொழிலாளர்களையும் மீட்டனர்.

The post கேரளாவில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் கயிறு கட்டி மீட்பு: இன்றும் கன மழை தொடரும் appeared first on Dinakaran.

Related Stories: