மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது

சேலம், ஜூலை 5: சேலம் மாவட்டத்தில் 17,955 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, முதல்நிலை சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக தேர்தலின் போது பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மொத்தமுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளும், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 4 பாராளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. இதனையடுத்து தேர்தலில் பயன்படுத்துவதற்காக 8,156 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,794 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 5,005 யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரியப்படுத்தும் விவிபாட் கருவிகள் என மொத்தம் 17,955 இயந்திரங்கள் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய இருப்பறையில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களில், முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் நேற்று தொடங்கியது. அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் கார்மேகம், முதல்நிலை சரிபார்க்கும் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது டிஆர்ஓ மேனகா உடனிருந்தார். பெங்களூர் பெல் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள், இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் அடுத்த மாதம் 10ம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: