12 ஆண்டுகளுக்கு பிறகு அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

திருப்புத்தூர், ஜூலை 2: திருப்புத்தூர் அருகே தேவரம்பூரில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு நேற்று நடைபெற்றது. திருப்புத்தூர் அருகே தேவரம்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஆதினமிளகி அய்யனார், பொன்னரசு கூத்த அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரவி எடுப்பு விழா 12 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அதன் பின் இவ்விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கிராமமக்கள் ஒன்று கூடி, கிராமத்தின் பாரம்பரிய புரவி எடுப்பு விழாவை கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி 15 நாட்களுக்கு முன்பு காப்புக் கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பிடிமண் கொடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு புரவி (குதிரை) எடுப்பு விழா நடைபெற்றது. கிராமத்தினர் முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கை மேளதாளத்துடன் சூலக்கரையில் இருந்து சாமியாட்டத்துடன், புரவிகளை தோளில் சுமந்து வந்தனர். ஒரு அரண்மனைக் குதிரை மற்றும் 4 காரணக் குதிரையில் அய்யனார் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். புரவிகள் ஊர்வலமாக வந்து கிராமத்தின் மந்தையில் வைக்கப்பட்டது. அதன் பின்பு தீபாராதனை நடைபெற்றது. நேற்று மாலை மீண்டும் புரவிகள் மந்தையில் இருந்து ஊர்வலமாக கிளம்பி, ஆதினமிளகி அய்யனார் கோயில் மற்றும் பொன்னரசு கூத்த அய்யனார் கோயில் சென்றடைந்தது.

The post 12 ஆண்டுகளுக்கு பிறகு அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: