16 மாவட்ட இளைஞர்களுக்கு ராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம்: பெரம்பலூரில் துவங்கியது

பெரம்பலூர்: பெரம்பலூரில் இன்று 16 மாவட்ட இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கான முகாம் துவங்கியது. கடந்த ஆண்டு இந்திய அரசு அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்படி 17 ஆண்டு 6 மாத வயதிலிருந்தே ராணுவத்தில் இணைந்து பயிற்சிபெற்று நான்காண்டுகள் பணியாற்றலாம். இவர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். பெரம்பலூரில் ஜூலை 1 (இன்று) முதல் 5ம் தேதி வரை திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களில் இருந்து, ஏற்கனவே முதற்கட்ட தேர்வில் தேர்வான 3200 பேருக்கு உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கான முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தினமும் 800 பேர் வரவழைக்கப்பட்டு 4 நாட்கள் உடற்தகுதி தேர்வுகளும், 5ம் நாளில் மெடிக்கல் தேர்வும் நடத்தப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உடற்தகுதித் தேர்வுகள் இன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கியது. இப்பணிகளை திருச்சி மண்டல ராணுவ ஆள் சேர்ப்பு பணி அலுவலர் கர்னல் தீபாகுமார், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கயற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மருத்துவ அலுவலர் டாக்டர் முதித்துப் ரெட்டி, மேஜர் நீலம் குமார் ஆகியோர் முன்னிலையில், பெரம்பலூர் மாவ ட்ட கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதலில் சுற்றுக்கு 100 பேர் வீதம் 1600 மீட்டர் தூரத்திற்கு 4 ரவுண்டு ஓட வைத்து, அதில் 5.30 நிமிடத்தில் வருவோர் 60 மதிப்பெண்களுடன் முதல்வகுப்பிலும், 5.40 நிமிடத்தில் வருவோர் 48 மதிப்பெண்களுடன் 2ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றதாக கணக்கிடப்பட்டனர். அதனைத்தாண்டி ஒரு செகண்ட் தாமதமாக வந்தாலும் ராணுவ வீரர்களும், போலீசாரும் கயிறுகளால் தடுத்து வீரர்களை வெளியேற்றினர். இதில் சிலர் மயங்கி விழுந்தனர். அவர்களை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்சென்று மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். காலை 8 மணி வைர ஓட்ட தேர்வு நடந்தது. அதன்பின்னர் நீளம் தாண்டுதல், புல்லப்ஸ் உள்ளிட்ட தகுதி தேர்வுகள் நடந்தன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

இத்தேர்வில் பங்கேற்க வெளி மாவட்டங்களில் இருந்து நேற்று மாலை 5 மணி முதலே இளைஞர்கள் வர துவங்கினர். இவர்கள் நள்ளிரவு 1 மணியில் இருந்தே மைதானத்திற்குள் வரவழைக்கப்பட்டனர். நள்ளிரவு முதல் விடிய விடிய நடைபெற்ற தேர்வுக்காக பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானம் சர்வதேச கிரிக்கெட் மைதானம்போல் இரவைப் பகலாக்கும் ஒளி வெள்ளத்தில் மிதந்தது. மைதானத்தின் ஓடுபாதை உள்பட பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டது.

The post 16 மாவட்ட இளைஞர்களுக்கு ராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம்: பெரம்பலூரில் துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: