விவசாயிகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு கம்பத்தில் மாலைநேர உழவர் சந்தை கடைகள்

*அரசுக்கு குமுளி, கம்பம்மெட்டு விவசாயிகள் பாராட்டு

கம்பம் : தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவதானப்பட்டி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. இங்கு நெல், பயிர் சாகுபடி அதிகளவில் நடக்கிறது.

விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன. இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மகளிர் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நீர்நிலை மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறார்.

இதன்படி, தேனி மாவட்டத்தில் ரூ.பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்களின் இடையூறின்றி நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசால் 1999ம் ஆண்டு உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி வழங்கிய 1154.5 சதுரமீட்டர் (28.5 சென்ட்) நிலத்தில் உழவர் சந்தை கடந்த 2000ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

உழவர்சந்தையில் தினந்தோறும் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவைகளுக்கு சராசரியாக மொத்த விற்பனை விலையை விட 20 சதவிகிதம் அதிகமாகவும், சில்லறை விற்பனையைவிட 15 சதவீதம் குறைவாகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது. உழவர் சந்தைகள் அனைத்தும் வேளாண்மை விளைபொருள் விற்பனை துறைமூலம் நிர்வகிக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள உழவர் சந்தையின் கண்காணிப்பாளராக செயல்படுகின்றனர்.

விற்பனையிலும், காய்கறி வரத்துக்களிலும் தமிழகத்திலுள்ள உழவர்சந்தைகளில் முதல் பத்து இடங்களிலும், தேனி மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளது கம்பம் உழவர்சந்தை. தமிழக-கேரள எல்லைப்பகுதியான கம்பம்மெட்டு, குமுளி பகுதிகள் அருகே இருப்பதால் உள்ளூர் தவிர கேரளப் பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் கம்பம் உழவர் சந்தையில் தினந்தோறும் காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். இங்கு நாளொன்றுக்கு 40 முதல் 45 டன் காய்கறிகள் விற்பனையாகிறது. காலை 5 மணிக்கு திறக்கப்படும் உழவர்சந்தை பிற்பகல் ஒரு மணிக்கு அடைக்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் விவசாயிகள் நலன் கருதி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில், மாவட்டம் தோறும் உழவர்சந்தைகளில், மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் வகையில், மாலைநேர உழவர்சந்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து சட்டசபையிலும் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த வாரம் பயிறு வகைகள், செக்கு எண்ணெய் வகைகள், சிறுதானிய வகைகள், நாட்டு கோழிமுட்டை, காளான், வெல்லம், கருப்பட்டி போன்ற விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்கள், உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி, மாவட்ட வேளாண்மைத்துறை (வணிகம்) துணை இயக்குநர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் கம்பம் எம்எல்ஏ இராமகிருஷ்ணன் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

மாலைநேர உழவர் சந்தை கடைகள், விவசாயிகளின் முன்னேற்றத்தில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாகும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உழவர்சந்தை விவசாயிகள் கூறுகையில், ‘‘விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது செயல்படுகிறது.
விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்து விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கிறது.

இடைத்தரகர்களின் இடையூறின்றி நேரடியாக பொதுமக்களுக்கு விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக உழவர்சந்தை தொடங்கி விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிய திமுக அரசு, விவசாயிகளின் முன்னேற்றத்தில் எடுத்துள்ள அடுத்தகட்ட நடவடிக்கையே மாலைநேர உழவர்சந்தை’’ என்றனர்.

உழவர்சந்தையில் சிசிடிவி கேமரா

தமிழக-கேரள எல்லையோரப்பகுதி என்பதால் கேரள எல்லைப்பகுதியான குமுளி, கம்பம்மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கம்பம் உழவர்சந்தைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சந்தைக்கு வரும் கூட்டத்தை பயன்படுத்தி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டுபோயின.

திருடர்களை கண்டுபிடிப்பதில் காலதாமதமானது. அதுபோல் சந்தை முடிந்து வீட்டுக்குச் செல்லும் விவசாயிகளின் விளைபொருளும் சந்தையிலிருந்து அடிக்கடி மாயமானது. இதையடுத்து திருட்டு சம்பவங்களை தடுக்க கம்பம் உழவர் சந்தையில் சந்தையின் உள்பகுதி, இரண்டு நுழைவாயில், அலுவலகம் உட்பட 10 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

‘கார்பைடு கல்’ மாம்பழம் விற்றால் நடவடிக்கை

மாம்பழ சீசனில் மாம்பழங்கள் இயற்கையாக பழுத்ததா அல்லது கார்பைடு கல் வைத்து பழுக்க வாக்கப்பட்டதா என பொதுமக்களுக்கு சந்தேகம் எழுவது வழக்கம். கம்பம் உழவர்சந்தையில் ‘கார்பைடு கல்’ மாம்பழம் விற்றால் விற்பனை செய்த விவசாயியின் விற்பனை அட்டை ரத்து செய்யப்படும் என்ற நடைமுறை உள்ளதால் இங்கு மாம்பழங்கள் நம்பி வாங்கலாம். இங்கு பணியாற்றும் அதிகாரிகளின் தீவிர முயற்சியால் கம்பம் உழவர்சந்தை முற்றிலும் பிளாஸ்டிக் இல்லாத உழவர்சந்தையாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் ரசாயண உரம்கலக்காத இயற்கை காய்கறிகள் விற்பனை செய்பவர்களை ஊக்கப்படுத்துவதோடு, அவர்களுக்கு சந்தையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. உழவர் சந்தை நிர்வாகம் பற்றியும், விலை நிர்ணயம் குறித்தும், விற்பனை நிலவரம், காய்கறிகளின் தரம், மார்கெட் நிலவரம் பற்றி தெரிநிது கொள்வதற்காக ஆண்டு தோறும் தமிழகத்தின் பல்வேறு விவசாய கல்லூரிகளைச்சேர்ந்த மாணவ,மாணவிகள் கம்பம் உழவர் சந்தைக்கு வருகின்றனர்.

The post விவசாயிகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு கம்பத்தில் மாலைநேர உழவர் சந்தை கடைகள் appeared first on Dinakaran.

Related Stories: