செந்தில் பாலாஜி விவகாரத்தில் எடுத்தேன், கவிழ்த்தேன் என முடிவெடுத்த கவர்னர்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் எடுத்தேன், கவிழ்த்தேன் என முடிவெடுத்துள்ளார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இதுகுறித்து தலைமை செயலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்திருப்பதாக நேற்று முன்தினம் அவசர கதியிலே ஒரு அறிவிப்பினை கவர்னர் வெளியிட்டார். அதேநேரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக, அவ்வாறு அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்குவதற்கு கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், அதனை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என்று தெரிவித்தார். அதன் பிறகு நள்ளிரவில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கவர்னரை அழைத்து நீங்கள் அவசர கதியிலே செயல்பட்டிருக்கிறீர்கள்.

அட்டார்னி ஜெனரல் கருத்தைக் கூட கேட்காமல் இவ்வாறு செய்திருக்கிறீர்கள் என்று அவர், கவர்னரை இடித்துரைத்தற்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்திருக்கக்கூடிய தன்னுடைய அந்த கடிதத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வருக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார். இந்த விஷயத்தில், கவர்னருக்கு மிக விளக்க மாக முதல்வர் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். ஒரு அமைச்சரை நியமிப்பதோ அல்லது அந்த அமைச்சரை நீக்குவதோ உரிய அந்த தனிப்பட்ட அதிகாரம், அந்த விருப்புரிமை முதல்வருக்கு மட்டுமே உரித்தானது என்றும், கவர்னருக்கு எந்தவிதமான அதிகாரம் இல்லை என தெளிவுபடுத்தியிக்கிறார்.

பொதுவாக, கவர்னர் இந்த நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பாக, அவர் அதை யோசித்தோ அல்லது அவர் உரிய அறிவுரைகளையோ பெற்றுக் கொள்ளாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அவராகவே ஒரு முடிவுக்கு வந்து அவசர கதியில் அறிவித்திருக்கிறார். அதை முற்றிலுமாக இந்த அரசு நிராகரிக்கிறது. ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு விட்டதினாலே, அவருக்கு தகுதி இழப்பு நிச்சயமாக வந்துவிடாது. அவருக்கு இன்னும் தண்டனை இல்லாதபோது, அவரை நீங்கள் தகுதி நீக்கம் செய்கிறேன் என்று நீக்கம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட முதல்வராக இருந்த போது, அவர் மீது இத்தகைய ஒரு விசாரணை வந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் கூட, அவர் தொடர்ச்சியாக அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். இன்றைக்கு ஒன்றிய அமைச்சர்களாக இருக்கும் ஏராளமானோர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அவர்கள், இன்றும் கூட தொடர்ச்சியாக ஒன்றிய அமைச்சரவையில் இருக்கிறார்கள். ஏறத்தாழ 11 வழக்குகள் அவர்கள் மீது இருக்கிறது. அவர்களை எல்லாம் நீக்கி விட்டார்களா? இப் பிரச்னையை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நாங்கள் சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

The post செந்தில் பாலாஜி விவகாரத்தில் எடுத்தேன், கவிழ்த்தேன் என முடிவெடுத்த கவர்னர்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: