கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திருநெல்வேலி எம்பி ஞானதிரவியத்துக்கு நோட்டீஸ்: திமுக பொது செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை

சென்னை: திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி ஞான திரவியம் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி அவருக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞான திரவியம் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படுவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் திமுக தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் அனுப்பியுள்ள நோட்டீசில், “உங்கள் மீதான புகார் குறித்த விளக்கத்தினை 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கட்சியின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் புகார் வந்துள்ளது.

விளக்கத்தை நேரிலோ, தபால் மூலமாகவே அனுப்பலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும், தூய யோவான் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராகவும் ஞானதிரவியம் எம்.பி இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு தென்னிந்திய திருச்சபையின் யோவான் பள்ளி தாளாளர் பொறுப்பில் இருந்தும், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஞான திரவியம் நீக்கப்பட்டார்.புதிய நிர்வாகியாக அரசு வழக்கறிஞர் அருள்மாணிக்கம் என்பவர் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் சென்ற ஞானதிரவியம், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திருநெல்வேலி எம்பி ஞானதிரவியத்துக்கு நோட்டீஸ்: திமுக பொது செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: