வைத்தியவீரராகவப் பெருமாள்‌ கோயிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு 2ம் நாள் தெப்ப உற்சவம்

 

திருவள்ளூர், ஜூன் 19: திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாத தெப்ப உற்சவம் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி மாத தெப்ப உற்சவம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த கோயில் அருகில், ஹிருதாப நாசினி என்ற குளம் உள்ளது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில், ஆனி மாத 2ம் நாள் தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது.

இதில், உற்சவர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளி கோயில் குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நோய் தீர்க்க வேண்டிக் கொண்டு தெப்பத் திருவிழாவில் பெருமாளை தரிசித்தால் நோய் தீரும் என்பதால் திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். மூன்று முறை குளத்தை வலம் வந்த பிறகு திருக்கோயிலுக்கு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் சென்றார்.

இந்த ஆனி மாத தெப்பத்திருவிழாவில் திருவள்ளூர் மட்டுமல்லாது பெரியகுப்பம், ஈக்காடு, காக்களூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வைத்திய வீரராகவரை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர்கள் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

The post வைத்தியவீரராகவப் பெருமாள்‌ கோயிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு 2ம் நாள் தெப்ப உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: