அரசியல் சட்டத்திற்கு விரோதமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்: திமுக எம்.பி. கனிமொழி, சபாநாயகர் அப்பாவு கண்டனம்..!!

சென்னை: செந்தில் பாலாஜி வகித்த துறைகளை பிற அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்காமல், முதலமைச்சரின் பரிந்துரை கடிதத்திற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். பரிந்துரை கடிதத்தில் முதலமைச்சரின் காரணத்தை “Misleading & Incorrect” என ஆளுநர் ஏற்க மறுத்தார். செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பதை ஏன் குறிப்பிடவில்லை என்றும் வினவியிருந்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. முதலமைச்சரின் அதிகாரத்தை பறிக்க முயல்வதா என்று அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

திமுக எம்.பி. கனிமொழி:

அரசமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்கவேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்க செய்தியில், அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநராக இருக்கும் ரவி அவர்களுக்கு அதை முடிவு செய்யும் எந்த அதிகாரமுமில்லை. அரசமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் அப்பாவு:

அரசியல் சட்டத்திற்கு விரோதமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் இலாகாவை மாற்ற முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது. முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது, சட்டம் அதைத்தான் சொல்கிறது. முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியது தேவையற்றது, தவிர்த்திருக்கலாம். யாருக்கு என்ன துறை என்பதை முடிவு செய்யும் அதிகாரம் முதல்வருக்கே உள்ளது. வழக்கு இருப்பதாலேயே ஒருவரை அமைச்சரவையில் இருந்து நீக்கத் தேவையில்லை. நீதிமன்ற காவல், வழக்கு நிலுவையில் இருந்தால் அமைச்ச பதவியில் இருக்கக்கூடாதென சட்டத்தில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

The post அரசியல் சட்டத்திற்கு விரோதமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்: திமுக எம்.பி. கனிமொழி, சபாநாயகர் அப்பாவு கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: