இன்று கரையை கடக்கும் பிபர்ஜாய் புயல்: 50,000 பேர் முகாம்களில் தங்க வைப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

அகமதாபாத்: சக்தி வாய்ந்த பிபர்ஜாய் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் 50,000 மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளது. பிபர்ஜாய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிதீவிர புயலானது குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் மாவட்டம் ஜக்காவ் துறைமுகம் அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிபர்ஜாய் புயல் காரணமாக தேவபூமி, துவாரகா, ஜாம்நகர், ஜூனாகத், போர்பந்தர் ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.

இந்நிலையில் பிபர்ஜாய் புயலை எதிர்கொள்வதற்காக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தயார் நிலைகளை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “புயலை எந்தவொரு சூழலிலும் எதிர்கொள்ள மாநில அரசு அதிகாரிகளுக்கு உதவ ஆயுதப் படைகள் தயாராக உள்ளன” என்று தெரிவித்தார். புயலால் மோசமாக பாதிக்கப்படக் கூடிய கட்ச் மாவட்ட கடற்கரையில் இருந்து 10 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றும் பணியில் குஜராத் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50,000 பேர் வௌியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையின் 18 குழுக்கள், மாநில பேரிடர் மீட்பு படையின் 12 குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டிடத்துறையின் 115 குழுக்கள், மாநில மின்துறையின் 397 குழுக்கள் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் ராணுவம், கடற்படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினரும் இணைந்துள்ளனர். கடலோர மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகள், அலுவலகங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

துவாரகாவில் வானொலி கோபுரம் தற்காலிகமாக அகற்றம்
பிபர்ஜாய் புயலின் தீவிரவாதத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துவாரகாவில் இருந்த 90 மீட்டர் உயர வானொலி கோபுரம் பிரிக்கப்பட்டுள்ளது. புயலால் கோபுரம் சாய்ந்தால் ஏற்படும் உயிர், பொருள் சேதங்களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானொலி கோபுரம் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post இன்று கரையை கடக்கும் பிபர்ஜாய் புயல்: 50,000 பேர் முகாம்களில் தங்க வைப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: