தேவரியம்பாக்கம் கிராமத்தில் ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்: எம்எல்ஏ, எம்பி அடிக்கல் நாட்டினர்

வாலாஜாபாத்: தேவரியம்பாக்கம் ஊராட்சியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணியினை சுந்தர் எம்எல்ஏ, செல்வம் எம்பி ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இந்த ஊராட்சியை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, பாம்பு கடி, பிரசவம் உள்ளிட்டவைகளுக்கு வாலாஜாபாத், அய்யம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காஞ்சிபுரம் நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை சென்று வருகின்றனர்.

மேலும், இப்பகுதி கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக, அய்யம்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்று வந்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் தேவரியம்பாக்கம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என கிராமமக்கள், தொடர்ந்து கிராமத்துக்கு வரும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தமிழக அரசு சார்பில், தேவரியம்பாக்கம் கிராமத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் முன்னிலை வைத்தார்.

விழாவில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு, தேவரியம்பாக்கம் கிராமத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதியதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். அப்போது, கிராம மக்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வசதிகள் குறித்து விளக்கி கூறினார். மேலும், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம், காய்ச்சல் பாம்பு கடி, நாய் கடி, கர்ப்ப கால சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன சிகிச்சைகள் 24 மணி நேரமும் வழங்கப்படும். எனவே, தமிழக அரசு கொண்டுவந்த இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை, கிராம மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எம்எல்ஏ வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், மாவட்ட கவுன்சிலர் பொற்கொடிசெல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் அமலிசுதாமுனுசாமி, சஞ்சய்காந்தி, வட்டார மருத்துவ அலுவலர் முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜ், உட்பட திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுகாதாரத்துறை செவிலியர்கள், மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

The post தேவரியம்பாக்கம் கிராமத்தில் ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்: எம்எல்ஏ, எம்பி அடிக்கல் நாட்டினர் appeared first on Dinakaran.

Related Stories: