கிண்டியில் ரூ.250 கோடியில் நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்: அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

சென்னை: கிண்டியில் ரூ.250 கோடியில் அதிநவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கிறார்கள். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று, கடந்த 2021 ஜூன் 3ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 97-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் – இரைப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கலைஞர் நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் சுமார் ரூ.250 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழக மக்கள் பயன்பாட்டுக்கான திறந்து வைக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த மருத்துவமனை, ‘‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’’ என்று அழைக்கப்படும் என்று கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனயை திறந்து வைக்குமாறு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை கடந்த ஏப்ரல் 28ம் தேதி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அவரும் தமிழகம் வந்து, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை கடந்த ஜூன் 5ம் தேதி திறந்து வைப்பதாக உறுதி அளித்து இருந்தார்.

இந்த சூழலில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் தமிழ்நாட்டு வருகை ரத்தானதாக அறிவிக்கப்பட்டது. காரணம், குடியரசு தலைவர் வெளிநாடு செல்ல இருப்பதாக கூறப்பட்டது. மேலும், சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ல் குடியரசு தலைவர் திறந்து வைப்பதாக தகவல் வெளியாகியது. பின்னர் ஜூன் 15ம் தேதி (இன்று) குடியரசு தலைவர் தமிழகம் வருகையும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் காரணங்களும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், திட்டமிட்டபடி இன்று (15ம் தேதி) சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.250 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்புரையாற்றுகிறார். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மேயர், துணை மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள். மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நன்றி தெரிவிக்கிறார். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

The post கிண்டியில் ரூ.250 கோடியில் நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்: அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: