போக்குவரத்து விதிகளை மீறியதாக நிலுவையில் இருந்த 1.90 லட்சம் வழக்குகள் முடித்து வைப்பு: அபராதமாக ரூ.7.96 கோடி வசூல்

சென்னை: சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து சென்னை மாநகர காவல் எல்லையில் நாள் ஒன்றுக்கு 156 இடங்களில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி சென்னையில் ஹெல்மெட், எல்லை கோட்டை தாண்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டியது என பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், அபராதம் செலுத்தாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை 10 போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டி ஆன்லைன் மற்றும் சிறப்பு மையங்கள் மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த கடந்த 6, 8 மற்றும் 10ம் தேதிகளில் சென்னை முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 93 வழக்குகளும், போக்குவரத்து விதிகளை மீறியதாக 8,613 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பிறகு சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் இணையதளம் வாயிலாக 38 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 5 மாதங்களில் அபராதம் செலுத்தாமல் நிலுவையில் இருந்த 1,90,246 வழக்குகளை சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு 10 போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம் நினைவூட்டி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் அபராதமாக 7 கோடியே 96 லட்சத்து 97 ஆயிரத்து 130 ரூபாய் போக்குவரத்து போலீசார் சார்பில் வசூலித்தனர்.

The post போக்குவரத்து விதிகளை மீறியதாக நிலுவையில் இருந்த 1.90 லட்சம் வழக்குகள் முடித்து வைப்பு: அபராதமாக ரூ.7.96 கோடி வசூல் appeared first on Dinakaran.

Related Stories: