கழிவுநீர் வடிகால் பிரச்னைக்கு தீர்வு

 

அன்னூர், ஜூன் 14: அன்னூர் அருகே ஒட்டார்பாளையம் ஊராட்சி பூலுவ பாளையத்தில் கழிவுநீர் வடிகால் கட்டும் பணி மூன்று மாதங்களுக்கு முன் துவங்கியது. பாதி தூரம் கழிவுநீர் வடிகால் கட்டிய பிறகு ஒரு தரப்பினர் கழிவுநீர், வடிகாலை ஒட்டி குடிநீர் குழாய் செல்கிறது. மேலும், மேடாக உள்ளது என்று கூறி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இப்பணி மூன்று மாதங்களாக முடங்கி கிடந்தது.

இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், நேற்று மூன்றாவது முறையாக அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோவை மாவட்ட குற்ற பதிவேட்டு கூட டிஎஸ்பி வெற்றிச்செல்வன், மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி, அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் சாய் ராஜ், தாசில்தார் காந்திமதி, துணை தாசில்தார் நாட்ராயன் முன்னிலையில் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், ஊருக்குள் கழிவுநீர் வடிகால் கட்டும் போது மூடு கள் அமைத்து கட்டிடம் கட்டுவது எனவும், தேவைப்படும் இடத்தில் வலுவாக கான்கிரீட் அமைத்து குடிநீர் குழாய் மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் கட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதால் சமரசம் அடைந்தனர். இதனால் மூன்று மாதங்களாக முடங்கிக் கிடந்த கழிவுநீர் வடிகால் கட்டும் பணி மீண்டும் துவங்குகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கழிவுநீர் வடிகால் பிரச்னைக்கு தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: