ஓசூர் சிப்காட் தொழிற் பூங்காக்களுக்கு ரூ.187.20 கோடியில் சுத்திகரிப்பு ஆலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: ஓசூர் சிப்காட் தொழிற் பூங்காக்களுக்கு ரூ.187.20 கோடியில் சுத்திகரிப்பு ஆலை நிறுவுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சிப்காட் நிறுவனம் இதுநாள் வரை 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட 28 தொழிற் பூங்காக்களை, மொத்தம் 38 ஆயிரத்து 538 ஏக்கரில் ஏற்படுத்தி உள்ளது. இத்தொழிற் பூங்காக்களில் தற்போது வரை 3 ஆயிரத்து 142 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு செய்து, 7 லட்சத்து 56 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து சிப்காட் தொழிற் பூங்காக்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு இரண்டு கட்டங்களாக 20 விலிஞி கொள்ளளவு கொண்ட மூன்றாம் நிலை எதிர் சவ்வூடுபரவல் சுத்திகரிப்பு ஆலையை ரூ.187.20 கோடி மதிப்பீட்டில் நிறுவுவதற்கான திட்டப் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்திற்கான முதற்கட்டப் பணிகள் 15 மாதங்களில் நிறைவு பெறும். இத்திட்டத்தின் மூலம் 2092 ஏக்கரில் அமைந்துள்ள ஒசூர் சிப்காட் தொழிற்பூங்கா, 989 ஏக்கரில் அமைந்துள்ள சூளகிரி சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் ஓசூர் மண்டலத்தில் 1800 ஏக்கரில் அமையவுள்ள புதிய சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளின் நீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு, 800க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பயன்பெறும். இதனால், இப்பகுதியில் நிலத்தடிநீரும், மேற்பரப்பு நீரும் பாதுகாக்கப்படும்.

மேலும், இதன்மூலம், இத்தொழிற் பூங்காக்களில் புதிய தொழிற்சாலைகள் அமைந்திட வாய்ப்பு ஏற்பட்டு, கூடுதலாக 6,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படுவதுடன், 10,000 நபர்களுக்கு வேலைகிடைக்கும். சிப்காட் சார்பில் 537 பள்ளிகளுக்கு பலசெயல்பாட்டு அச்சுப்பொறிகளை கொள்முதல் செய்து வழங்குவதற்காக ரூ.50 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. சிப்காட் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து திருவண்ணாமலை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள 537 பள்ளிகளுக்கு பலசெயல்பாட்டு அச்சுப்பொறிகளை கொள்முதல் செய்வதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையினை, முதல்வரிடம் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு டி.ஆர்.பி. ராஜா அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுந்தரவல்லி, செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post ஓசூர் சிப்காட் தொழிற் பூங்காக்களுக்கு ரூ.187.20 கோடியில் சுத்திகரிப்பு ஆலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: